மனதை கொள்ளை கொள்ளும் ஜாக் அருவி

அருவியில் குளியல் என்ற உடனேயே நினைவுக்கு வருவது குற்றாலம் அருவிதான். அதனால் மக்கள், கோடை காலத்தில் குற்றாலத்துக்கு படையெடுப்பது சகஜம்.;

Update:2019-05-29 17:06 IST
இப்படி அனைவருமே குற்றாலத்துக்கு படையெடுப்பதால் கூட்டம் இங்கு அலைமோதும். நீங்கள் வித்தியாசமாக அருவியில் குளித்து மகிழ கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜாக் அருவிக்கு செல்லலாம்.

கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே உள்ள இந்த ஜாக் அருவி 335 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டுகிறது. ஷராவதி நதியிலிருந்து உருவாகும் ஜாக் அருவியில் ரோரர், ராக்கெட், ராஜா, ராணி என நான்கு அருவிகள் உள்ளன. இந்த அருவிக்கு அருகிலேயே லிங்கனமக்கி அணையும் உள்ளது. இந்த அருவிக்கு கெர்சோப்பா என்ற பெயரும் உண்டு. சென்னையிலிருந்து 550 கி.மீ. தொலைவிலும், ஷிமோகாவில் இருந்து 100 கி.மீ. தொலைவிலும் இந்த இடம் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள உயரமான அருவிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஜாக் அருவி. இங்கு செல்வதற்கு கர்நாடக மாநில சுற்றுலாத்துறை படிக்கட்டுகளை அமைத்துள்ளது.

இங்கிருக்கும் வியூ பாயின்டிலிருந்து பார்த்தால் பாறையில் வெள்ளியை உருக்கி ஊற்றியதைப் போல வெளரென்று தண்ணீர் பாய்வதை பார்ப்பதே மிகுந்த அழகாக இருக்கும். ஷிமோகாவில் தங்கிவிட்டு இங்கு செல்வது மிகவும் சிறப்பு. இப்பகுதியில் குறைந்த கட்டணத்தில் விடுதிகள் கிடைக்கின்றன. முன் பதிவு செய்துவிட்டு செல்வது மிகவும் சிறந்தது.ஷிமோகாவிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தப்பே நீர்வீழ்ச்சியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பகுதியாகும். பெரும்பாலானவர்கள் ஜாக் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு, குளித்துவிட்டு திரும்பி விடுவர். நீங்கள் அருகிலுள்ள முக்கியமான தப்பே நீர் வீழ்ச்சிக்கும் சென்று பாருங்கள், இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

ஜாக் அருவி பகுதியிலிருந்து 63 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லிங்கனமக்கி அணையிலிருந்து காடுகள் சூழ அமைந்திருக்கும் தீவுகளையும், மரங்களின் அழகையும் ரசிக்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. மழைக் காலங்களில் இந்த அணையை சுற்றிப்பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்த அணை 1964-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த அணை 300 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்து கடல்போல காட்சி தருகிறது. இந்த அணையிலிருந்து வெளியாகும் நீரிலிருந்து மகாத்மா காந்தி நீர் மின் நிலையம் செயல்படுகிறது. சக்ரா மற்றும் சவஹக்லு நீர் தேக்கங்களும் உள்ளன. குறுகிய கால சுற்றுலாவுக்கு திட்டமிடுபவர்கள், வார இறுதியில் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற பகுதியாக இது விளங்குகிறது.

மேலும் செய்திகள்