அணு ஆயுதங்களை ஒழிப்போம்

பிரமிப்பூட்டும் பிரமாண்டமான இந்த பூமிப் பந்தை பலமுறை வெடித்துச் சிதறவைக்கும் அளவுக்கு அணு ஆயுதங்களை தயாரித்து குவித்து வைத்திருக்கிறோம் நாம்.;

Update:2019-08-29 10:37 IST
ன்று (ஆகஸ்டு 29-ந்தேதி) சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்.

பிரமிப்பூட்டும் பிரமாண்டமான இந்த பூமிப் பந்தை பலமுறை வெடித்துச் சிதறவைக்கும் அளவுக்கு அணு ஆயுதங்களை தயாரித்து குவித்து வைத்திருக்கிறோம் நாம். அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகள் ஏறத்தாழ 13,865 அணுகுண்டுகளையும், அவற்றைக் கொண்டுபோய் பிற நாடுகள் மீது போடுவதற்கான ஏவுகணைகளையும் உருவாக்கி தயார் நிலையில் வைத்திருக்கின்றன. இத்தனைக் கொடிய அணு ஆயுதங்களை வடிவமைத்து, தயாரித்து, கையில் வைத்துக் கொண்டிருப்பது கொடிய நச்சுப்பாம்புகளோடு குடும்பம் நடத்துவது போன்றது தான்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் அமெரிக்காவின் தலைமையின் கீழ் முதலாளித்துவ நாடுகளும், சோவியத் ஒன்றியத்தின் தலைமைக்குக் கீழ் சோசலிச நாடுகளும் இரண்டு அணிகளாக நின்று, ஒரு பெரும் பனிப்போரில் ஈடுபட்டன. ஏராளமான அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் தயாரித்து இருதரப்பும் ஆயுதப்போட்டியை உருவாக்கின. இதனால் ஒட்டு மொத்த உலகமுமே பதற்றம் நிறைந்து, வளர்ச்சியை இழந்து, வறுமையில் வாடியது.

சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, கிழக்கு, மேற்கு எனப் பிரிக்கப்பட்டிருந்த நமது உலகம் வளமான வடக்கு நாடுகள், வளரும் தெற்கு நாடுகள் என்று மாறியிருக்கிறது. முதலாளித்துவ மும்மையான தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பது அனைத்து நாடுகளின் அடிப்படைக் கொள்கையென்று ஆகி விட்டாலும், அணு ஆயுதங்களை இன்னும் அழிக்க முடியவில்லை.

நமது தெற்காசியப் பிராந்தியத்திலும் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போட்டி உருவாகி உச்சத்தை அடைந்திருக்கிறது. அணு வல்லரசான சீனா, பாகிஸ்தானை ஆதரிப்பதாலும் சீனாவை விரும்பாத அமெரிக்கா இந்தியா பக்கம் நிற்பதாலும் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இம்மண் மீது அமைதியான, வளமான வாழ்க்கையை நாம் தொடர்வதற்கான ஒரே வழி பயங்கரமான அணு ஆயுதங்களை பூமியிலிருந்து அறவே நீக்குவதுதான். ஆனால் மந்திரத்தால் இந்த மாங்காய் விழாது. அணு ஆயுதப் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமைகிறது. அதாவது கைவசமிருக்கும் அணுகுண்டுகளை மேம்படுத்தி, செழுமைப்படுத்தி, நவீனமயமாக்கி, அண்மைத் தொழில்நுட்பங்களோடு அதிக சக்திகொண்ட புதிய அணுகுண்டுகளை வடிவமைப்பதற்காக நாடுகள் மேற்கொள்ளும் பரிசோதனைகளைத் தடுக்கிறது இந்த உத்தி. இதைத்தவிர அணு வெடிப்புப் பரிசோதனைகளால் உலகெங்கும் ஏராளமான மக்கள் கதிர்வீச்சுக்கும், கொடிய நோய்களுக்கும் ஆளானதும் அணுவெடிப்புப் பரிசோதனைகளுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. இந்த அணு ஆயுதப் பரிசோதனை தடுப்பு நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதியை ‘அணு ஆயுதப் பரிசோதனைகளுக்கு எதிரான சர்வதேச நாளாக’ ஐ.நா. சபை அனுசரிக்கிறது. இதைப்போலவே சி.டி.பி.டி. என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் ‘பரந்துபட்ட அணுப் பரிசோதனை தடுப்பு ஒப்பந்தம்’ 1996-ம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று ஐ.நா. பொதுச்சபையால் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒப்பந்தம் பொதுவான மற்றும் ராணுவத்துக்கான அனைத்து அணு வெடிப்புப் பரிசோதனைகளையும் தடை செய்கிறது. ஏறத்தாழ 184 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதனை இன்னும் அமல்படுத்தவில்லை. கடந்த 1945-ம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து 1963-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரையிலான பதினெட்டு ஆண்டுகால இடைவெளியில் மொத்தம் 499 அணுவெடிப்புப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல 1964 முதல் 1996 வரை 1,337 பூமிக்குள்ளான அணுவெடிப்புப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கடலுக்குள்ளும், விண்வெளியிலும்கூட அணுவெடிப்புப் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

சோவியத் ஒன்றியம் ரகசியமாக பூமிக்குள் அணு வெடிப்புப் பரிசோதனைகள் நடத்தி ஆயுதத் தயாரிப்பில் முன்னேறிவிடும் என்று அமெரிக்கத் தரப்பு அஞ்சியது. அமெரிக்கா கோரியது போன்று அணுவெடிப்புக்களை நேரடியாகக் கண்காணிப்பது என்பது உளவு நடவடிக்கை ஆகிவிடும் என்று சோவியத் தரப்பு எதிர்த்தது. இதுவரைக் கட்டுக்குள்ளிருந்த இந்தப் பிரச்சினை அண்மையில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைப் பரிசோதனையால் கைவிட்டுப்போகுமோ என்கிற கவலை எழுகிறது.

இந்தியா கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் என்ற இடத்தில் அணு ஆயுதப் பரிசோதனைகள் நடத்தியது. அந்தப் பரிசோதனைகள் வெற்றிகரமான முடிவுகளைத் தந்துவிட்டதால், மேலும் அணு ஆயுதப் பரிசோதனைகள் செய்ய மாட்டோம் என்று அறிவித்தது வாஜ்பாய் அரசு. அணுகுண்டுகளை நாங்கள் முதலாவதாக பயன்படுத்த மாட்டோம் என்றும், அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளின்மீது அணுகுண்டுகளைப் போடமாட்டோம் என்றும் இந்தியா அறிவித்தது.

ஆனால் தற்போதைய இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ‘முதலாவதாக பயன்படுத்தாமை’ எனும் இந்தியாவின் கொள்கை கல்லில் செதுக்கப்பட்டதல்ல, வருங்கால சூழல்களுக்கேற்ப அது மாறும் என்று அறிவித்திருக்கிறார். வாஜ்பாய் வகுத்தக் கொள்கை என்றும் பாராமல் அதை மாற்றுவதற்கு முனைகிறது மோடி அரசு. நாம் இப்படி ஒரு முடிவெடுத்தால்தான் பாகிஸ்தான் ‘முதலாவதாக பயன்படுத்தாமை’ கொள்கையை ஏற்றெடுக்கும் என்று கடினப்போக்குடைய சிலர் வாதிடுகின்றனர்.

ஒரு தரப்பு அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், மறுதரப்பும் பலத்த தாக்குதலை மேற்கொண்டு, இரண்டு தரப்புக்களுமே இல்லாமலாகிவிடும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி அணு ஆயுதப் போர் ஓர் அறிவில்லா நடவடிக்கை என்று சாடுகின்றனர் மென்முறை போற்றும் பலர்.

அணு ஆயுதங்களை மட்டும் எதிர்த்துவிட்டு பிற அணுசக்தித் தொடர்பான நடவடிக்கைகளை ஆதரிப்பது என்பது பத்தாம்பசலித்தனமானதாகவே இருக்கும். சமூகத்தை சீரழித்து சிதைக்கும் கஞ்சாவின் விற்பனையை மட்டும் தடுத்து பயனில்லை, கஞ்சா செடியையே எங்கும் வளர்க்க விடக்கூடாது என்று நாம் இயங்குகிறோம். அதுபோலவே, அணு ஆயுதங்களை மட்டும் எதிர்த்தால் போதாது, ஏராளமான அணுக்கழிவுகளையும், கதிர்வீச்சையும் வெளியிட்டு, அணுகுண்டுகள் தயாரிக்க உதவும் புளூட்டோனியத்தையும் உருவாக்கும் அணுமின் நிலையங்களையும் நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னதுபோல, “புதியதோர் உலகம் செய்வோம், கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!”

சுப. உதயகுமாரன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.

மேலும் செய்திகள்