பசியாற பொன்னான கோவில்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருக்கிறது, பொற்கோவில். இங்கு வரும் பக்தர்களுக்கு உணவு அளிப்பதற்காகவே இரவு பகலாக செயல்படுகிறது மிக பிரமாண்டமான சமையலறை.;
ஜாதி, மதம், இனப் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பசித்த நேரத்தில் இங்கு வந்து உணவு அருந்திச் செல்லலாம். உலகின் மிகப் பெரிய கிச்சன் இதுதான். இதனை ‘குரு கா லாங்கர்’ என்று அழைக்கிறார்கள்.
சுபி முஸ்லிம் மத பெரியவர் பாபா பெரித் என்பவர் முதன் முதலில் இப்படி ஒரு திட்டத்தை தோற்றுவித்துள்ளார். அதனை உதாரணமாகக் கொண்டு, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், குருத்வாராக்களில் இதனை நடைமுறைப்படுத்தினார்.
ஜாதி, மதம், மொழி, ஆண், பெண், வயது, ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக தரையில் அமர்ந்து உணவு அருந்த வேண்டுமென்பதுதான் அவரது எண்ணம். சீக்கிய மதத்தின் மூன்றாவது குரு அமர்தாஸ் ஜீயால் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு சீக்கிய குடும்பமோ அல்லது பல குடும்பங்களோ சேர்ந்து உணவு செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. பாரம் பரியமாக இது தொடர்கிறது. வெளியில் இருந்து எந்த உணவும் பெறப் படுவதில்லை. அனைத்தும் இங்கேயே சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பொற்கோவிலில் உணவு அருந்துகிறார்கள். பண்டிகை காலங்களில் எண்ணிக்கை இன்னும் அதி கரிக்கும். தினமும் 1500 கிலோ அரிசி உணவு தயாரிக்கப்படும். 2 ஆயிரம் கிலோ காய்கறிகள் பயன்படுத்தி சமைக்கப்படும். 12 ஆயிரம் கிலோ கோதுமை மாவு பயன்படுத்தி ரொட்டிகள் சுடப்படும். அது தவிர 13 ஆயிரம் கிலோ பருப்பு வகைகள் கொண்டும் குழம்பு தயாரிக்கப்படும். காய்கறி உணவு மட்டுமே மிகவும் சுத்தமாக சமைக்கப்பட்டு சுடச் சுட பரிமாறப் படும்.
இந்த கிச்சனில் தினமும் 2 லட்சம் ரொட்டிகளை சுட்டு எடுக்க முடியும். ஒரு மணி நேரத்தில் இங்குள்ள ரொட்டி சுடும் இயந்திரம் 25 ஆயிரம் ரொட்டி களை சுட்டெடுக்கும். தினமும் 100 கியாஸ் சிலிண்டர்கள் காலியாகுமாம். தினமும் 5000 லிட்டர் பால், ஆயிரம் கிலோ சர்க்கரை, 500 கிலோ வெண்ணெய் பயன்படுத்தி இனிப்பு தயாரிக்கப்படுகிறது.
இந்த கிச்சனில் 450 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் பணியில் இருப்பார்கள். சப்பாத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற பணிகளில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.
மிகப் பெரிய அண்டாக்களில் உணவு சமைக்கப்படுகின்றன. கிச்சனில் இரு உணவுக் கூடங்கள் உள்ளன. ஒவ்வொரு கூடத்திலும் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை சாப்பிட முடியும். உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் ஒரே கிச்சன் இதுவாகத்தான் இருக்கும். ‘ஷிப்ட்’ முறையில் உணவு தயாரிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. உணவு பரிமாறும் பணியில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர்.
தன்னார்வத் தொண்டர்களே தட்டுகளை கழுவுகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் தட்டுகள், டம்ளர்கள் மிக சுத்தமான முறையில் கழுவப்படுகின்றன. தன்னார்வத் தொண்டர்களை ‘சேவாதர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். மிகத் தரமான வகையில் உணவு தயாரிக்கப்பட்டு சுத்தமான முறையில் மக்களுக்கு பரிமாறப்படுகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கி வயிறார உண்ணலாம். உங்கள் வயிறு நிரம்பவில்லை என்றால் மட்டுமே பொற் கோவில் வருத்தப்படும்!