பொதுத் துறையைச் சேர்ந்த மின்சார நிறுவனங்களின் முதலீட்டு செலவினத்தை 0.5% குறைக்க திட்டம்

பொதுத்துறையைச் சேர்ந்த மின்சார நிறுவனங்களின் முதலீட்டு செலவினத்தை, அடுத்த நிதி ஆண்டில் (2020-21) 0.5 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.;

Update:2020-02-03 13:28 IST
நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், மின்சார துறையைச் சேர்ந்த மத்திய அரசு நிறுவனங்களின் முதலீட்டை ரூ.44,693 கோடியாக (மறுமதிப்பீடு) குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் அது ரூ.56,742 கோடியாக இருந்தது. இந்நிலையில் வரும் 2020-21-ஆம் ஆண்டில் இந்த நிறுவனங்களின் முதலீட்டுச் செலவை 0.5 சதவீதம் குறைத்து 44,469 கோடி என்ற அளவில் வைத்திருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில், பவர் கிரிட் கார்ப்பரேஷனின் முதலீடு அதிகபட்சமாக 30 சதவீதம் குறைந்து ரூ.10,500 கோடியாக இருக்கும் என தெரிகிறது. பட்ஜெட் மதிப்பீட்டின்படி நடப்பு நிதி ஆண்டில் இதன் செலவினம் ரூ.15,000 கோடியாக இருக்கும். எனினும் என்.டி.பி.சி. நிறுவனத்தின் முதலீடு (ரூ.20,000 கோடியில் இருந்து) ரூ.21,000 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளது.

இதே போன்று என்.எச்.பி.சி. முதலீடு (ரூ.5,199 கோடியில் இருந்து) ரூ.5,401 கோடியாக உயர்த்தப்படுகிறது. தாமோதர் வேலி கார்ப்பரேஷனின் செலவினம் (ரூ.1,410 கோடியில் இருந்து) ரூ.2,342 கோடியாக அதிகரிக்கிறது.

நீப்கோ முதலீட்டுச் செலவினம் (ரூ.945 கோடியில் இருந்து) ரூ.564 கோடியாக குறைகிறது. எஸ்.ஜே.வி.என்.எல். முதலீடு (ரூ.1,200 கோடியில் இருந்து) ரூ.2,880 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனின் செலவினம் (ரூ.939 கோடியில் இருந்து) ரூ.1,781 கோடியாக உயர்த்தப்படுகிறது.

மொத்த செலவினம்

நடப்பு நிதி ஆண்டில் மத்திய மின்துறை அமைச்சகத்தின் மொத்த செலவினம் ரூ.21,862 கோடியாக (மறுமதிப்பீடு) இருக்கும் என தெரிகிறது. வரும் நிதி ஆண்டில் இது ரூ.21,881 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்