ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உருக்கு உற்பத்தி 3% குறைந்தது

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், கடந்த ஜனவரி மாதத்தில் 14.10 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்து இருக்கிறது.

Update: 2020-02-12 10:44 GMT
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், கடந்த ஜனவரி மாதத்தில் 14.10 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 14.53 லட்சம் டன்னாக இருந்தது.

ஜனவரி மாதத்தில் இந்நிறுவனத்தின் தட்டை வடிவ உருக்குப் பொருள்கள் உற்பத்தி 1.4 சதவீதம் குறைந்து 10.25 லட்சம் டன்னாக உள்ளது. கம்பி போன்ற நீள்வகை உருக்கு தயாரிப்புகள் 0.5 சதவீதம் சரிந்து 3.42 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.187 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,603 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 88 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனப் பங்கு ரூ.279-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.293.35-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.288.75-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.92 சதவீத உயர்வாகும்.

மேலும் செய்திகள்