பிடல் காஸ்ட்ரோ
தனது தாய் மற்றும் தந்தையின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு, பிடல் காஸ்ட்ரோவுக்கு கிடைத்தது. இவருக்கு சிறுவயதில் இருந்தே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு இருந்தது.;
கியூபாவில் உள்ள பிரான் என்ற இடத்தில் கடந்த 1926-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி ஏன்சல் காஸ்ட்ரோ, லினா ஆகியோருக்கு மகனாக பிறந்தார், பிடல் அய்ஜாந்திரோ காஸ்ட்ரோ. இவர் பிறந்த பிறகே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனால் தனது தாய் மற்றும் தந்தையின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு, பிடல் காஸ்ட்ரோவுக்கு கிடைத்தது. இவருக்கு சிறுவயதில் இருந்தே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு இருந்தது. அவருடைய தந்தை நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின உழைப்பினால் பண்ணையாராக உயர்ந்தார். அவர்களின் பண்ணையில் ஆயிரக்கணக்கிலான கியூப மக்கள் பணிபுரிந்தனர். கிட்டத்தட்ட 1940 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணையை சொந்தமாக வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோ 1930-ம் ஆண்டு சான்டியாகோ-டி- கியூபா என்ற ஊரில் உள்ள லாசேல் பள்ளியில் தனது படிப்பை தொடங்கினார். அதன் பிறகு டோலோரஸ் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். 1941-ம் ஆண்டு பெலன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதுதான் அவர் கம்யூனிச கொள்கைகளை பற்றி தெரிந்து கொண்டார். அதில் ஆரம்ப காலத்தில் பெரியளவில் நாட்டம் இல்லை. 1945-ம் ஆண்டு 2-வது உலகப்போர் முடிவுக்கு வந்தபோதுதான் பிடல் காஸ்ட்ரோ தனது கல்லூரி படிப்பை முடித்து இருந்தார். ஹவானா சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.
அப்போதுதான் கம்யூனிச கொள்கைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் அவர் ஒரு முழு கம்யூனிசவாதியாக மாறினார். ஹவானா பல்கலைக்கழகத்தில் இரு கட்சி தலைமைகள் இருந்தன. அதாவது 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஆர்த்தோடாக்ஸ் இயக்கம் ஆகும். கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து அரசியலில் கொஞ்சம், கொஞ்சமாக ஈடுபட்ட பிடல் காஸ்ட்ரோ, முதல் தேர்தலிலே பிரசாரத்தில் ஈடுபட தொடங்கினார். அத்தேர்தலில் வெற்றியும் பெற்றார். மேலும் கல்லூரியில் பயிலும்போதே பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். தன் அபார பேச்சு திறமையால் மக்களை அதிகம் கவர்ந்தார்.கியூபாவின் எல்லா வளங்களும், சொத்துக்களும் கியூபாவுக்கும், கியூப மக்களுக்குமே சொந்தம், வேறு எந்த நாட்டவர்களுக்கும் உரிமை கிடையாது என்று பேசினார். 1952-ம் ஆண்டு கியூபாவின் ஆட்சியை பாடிஸ்டா கைப்பற்றினார். அப்போது பிடல் காஸ்ட்ரோ ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற இதழை தொடங்கினார். பின்னர் அதில் பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளையும், பாடிஸ்டா அமெரிக்காவின் கைப்பாவை என்பதையும் அம்பலப்படுத்தி மக்களை புரட்சிக்கு திரட்டினார்.
1953-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி மொன்காடாத் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்த பிடல் காஸ்ட்ரோ திட்டமிட்டார். ஆனால் அவரது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியது ஆகிய காரணங்களால் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து பிடல் காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 1953-ம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது புரட்சி திட்டம் தீட்டியதை பிடல் காஸ்ட்ரோ ஒப்புக்கொண்டார். எனினும் பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்து, அமெரிக்காவை கடுமையாக சாடினார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 1955-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பிறகு மெக்சிகோ சென்ற பிடல் காஸ்ட்ரோ, கொரில்லா போர்முறை தாக்குதலை கற்றார். மேலும் அவருக்கு போராளி சேகுவாராவின் அறிமுகம் கிடைத்தது. அவர் கியூபா விடுதலை போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். அவர்கள் கிரான்மா என்ற கள்ளத்தோணி மூலம் கியூபா நாட்டுக்கு வந்தனர். அடர்ந்த மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ்தாராவில் தங்கிருந்து கியூபா விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்படுத்தினர்.
பின்னர் படிப்படியாக முன்னேறி கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிச குடியரசு கட்சி ஆட்சியை பிடித்தது. உடனே அவரை அமெரிக்கா தன்வசம் இழுக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மேலும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூப மக்களுக்கே சொந்தம் என்று மீண்டும் கூறினார் பிடல் காஸ்ட்ரோ. இதன் காரணமாக கியூபா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. அவற்றை சாதுர்யமாக எதிர்கொண்டார், பிடல் காஸ்ட்ரோ. கியூபாவை அடைய முடியாமல் போனதால், அதற்கு காரணமான பிடல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா திட்டம் தீட்டியது. அதுவும் ஒருமுறை, இருமுறை அல்ல. மொத்தம் 638 முறை அவரை கொல்ல அமெரிக்காவின் சி.ஐ.ஏ. முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. கியூபாவில் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை பிடல் காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். இதன் பலனாக 1995-ம் ஆண்டு கியூபாவின் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆக உயர்ந்தது. மருத்துவத்துறையில் உலகிலேயே சிறந்த நாடாக இன்றுவரை கியூபா விளங்குகிறது.
தனது தலைமையில் ஆட்சி அமைந்ததும் முதல் பணியாக எழுத்தறிவு இயக்கம் ஒன்றை பிடல் காஸ்ட்ரோ தொடங்கினார். இதன் நோக்கம், ‘தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்’ என்பது ஆகும். இதன் மூலம் ஒரே ஆண்டில் 30 சதவீதமாக இருந்த எழுத, படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கை 98.2 சதவீதமாக உயர்ந்தது.
பிடல் காஸ்ட்ரோ, 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக இருந்தார். 1976-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை கியூபாவின் அதிபராக இருந்தார். பின்னர் வயது மூப்பு மற்றும் செரிமான கோளாறு ஆகிய காரணங்களால் பதவி விலகினார். மேலும் தனது தம்பியான ராவுல் காஸ்ட்ரோவிடம் அதிபர் பதவியை ஒப்படைத்தார். அதன்பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி இரவில் தனது 90-வது வயதில் பிடல் காஸ்ட்ரோ இயற்கை எய்தினார்.