குட்டி விமானத்தில் உலகம் சுற்றும் இளம்பெண்

பெல்ஜியத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஜாரா ரூதர்போர்ட். இவர் தனி குட்டி விமானத்தில் 51 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு உலகை சுற்றி வர இருக்கிறார். இந்த பயணத்துக்காக உலகின் அதிவிரைவு குட்டி விமானத்தை தேர்ந்தெடுத் திருக்கிறார். வருகிற 11-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கும் ஜாரா, தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்தால், குட்டி விமானத்தில் தன்னந்தனியே அதிக தொலைவு உலகத்தை வலம் வந்த முதல் இளம்பெண்.;

Update:2021-08-10 12:57 IST
30 வயதான ஷாயிஸ்டா வாய்ஸ் தன்னந்தனியே குட்டி விமானத்தில் உலகைச் சுற்றியதுதான் தற்போதைய உலக சாதனையாக இருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் சிறுமிகளும், பெண்களும் முன்னு தாரணமாக திகழவேண்டும் என்பதே ஜாரா ரூதர்போர்டின் நோக்கமாக இருக்கிறது.

“நான் இந்த உலகம் முழுவதும் பறக்க விரும்புகிறேன். 19 வயதில் இந்தப் பயணத்தை தொடங்க நான் முடிவு செய்தபோது, என் தாய் ஆட்சேபம் தெரிவித்தார். தனியாக பயணம் மேற்கொள்வது சாத்தியமா? என்ற தனது கவலையை வெளிப்படுத்தினார். பின்னர் சமா தானம் ஆகிவிட்டார். என்னைப் பார்க்கும் சிறுமிகளுக்கு, நாமும் ஒருநாள் இதுபோலவே பறந்து உலகை சுற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். விமானத்துறையைப் பொறுத்தவரை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த சாதனையை நெருங்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். மேலும், மற்ற பெண்களும் முயற்சி செய்து என் சாதனையை முறியடிப்பார்கள் என்று நம்புகிறேன். இப்போதே ஆண்களுடன் போட்டியை தொடங்குவோம். வாருங்கள்” என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார்.

ஜாரா ரூதர்போர்டின் தாய் பீட்ரைஸ் டி ஸ்மெட், தந்தை சாம் ரூதர்போர்டு இருவரும் விமான பைலட்களாக பணியாற்று கிறார்கள். மகளின் சாகச பயணம் குறித்து ஜாராவின் தாயார் பீட்ரைஸ், “உலகம் முழுவதும் குட்டி விமானத்தில் பறக்கப்போவதாக என் மகள் கூறியபோது, என் இதயத் துடிப்பே நின்றுவிட்டது. சகஜநிலைக்கு திரும்ப சிறிது நேரம் பிடித்தது. இப்போது அவளது முடிவுக்காக பெருமைப்படுகிறேன். அவளுக்கு பக்கபலமாக துணை நிற்கிறேன்” என்றார்.

51 ஆயிரம் கி.மீ தொலைவிலான இந்த குட்டி விமான பயணத்தை 3 மாதங்களில் நிறைவு செய்ய ஜாரா திட்டமிட்டுள்ளார். சொந்த பணத்தைச் செலவு செய்தும், சில ஸ்பான்ஸர்கள் உதவியுடனும் இந்த சாதனைப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

மேலும் செய்திகள்