மாதவன் மகனின் மறுபக்கம்

நடிகர் மாதவன் மகனின் கவனம் திரை உலக பிம்பத்தில் இருந்து விலகி விளையாட்டுத்துறை மீது திரும்பி இருக்கிறது. நீச்சல் வீரராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பவர், போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து தந்தைக்கும் பெருமை சேர்த்து வருகிறார். அவரை பற்றிய சிறு தொகுப்பு இது.;

Update:2021-11-05 17:24 IST

மாதவன் மகனின் பெயர், வேதாந்த். 2005-ம் ஆண்டு பிறந்தவர்.

16 வயதாகும் இவர் கர்நாடக மாநிலம்பெங்களூருவில் சமீபத்தில் நடந்த 47-வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் மகாராஷ்டிரா மாநிலம் சார்பில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் 800 மீட்டர் ப்ரீஸ்டைல் ​​நீச்சல், 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் ​​நீச்சல், 4×100 ப்ரீஸ்டைல் ​​ரிலே மற்றும் 4×200 ப்ரீஸ்டைல் ​​ரிலே ஆகிய நான்கு பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

அத்துடன் 100 மீட்டர் ப்ரீஸ்டைல்​ நீச்சல், 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ​​நீச்சல் மற்றும் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ​​நீச்சல் ஆகிய பிரிவுகளில் 3 வெண்கல பதக்கம் வென்றிருக்கிறார். ஒரே சமயத்தில் 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

``எல்லாவற்றிலும் என்னை முந்தி சென்று என்னை பொறாமைப்பட வைப்பதற்கு நன்றி. என் இதயம் பெருமிதம் கொள்கிறது. நான் உன்னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என் மகனே. இந்த சமயத்தில் உனக்கு 16-வது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் உனக்கு கொடுப்பதை விட உன்னால் இந்த உலகத்தை சிறந்த இடமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன். நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தந்தை’’ என்று மாதவன் மகனை பாராட்டி நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

வேதாந்த் 2018-ம் ஆண்டு முதல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

2019-ம் ஆண்டு நடந்த 10-வது ஆசிய (வயது பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் ப்ரீஸ்டைலை 00.25.97 விநாடியில் கடந்தது வேதாந்தின் சிறப்பான நீச்சல் சாதனையான அமைந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் நடந்த லாட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் பங்கேற்று இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்