போலீஸ்காரரின் கட்டுடல் ரகசியம்

உயரத்துக்கு ஏற்ற எடையும் கொண்ட ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நபராக விளங்குகிறார், நரேந்தர் யாதவ்.

Update: 2023-02-07 08:50 GMT

போலீஸ் வேலையில் சேருவதற்கு நேர்த்தியான உடற்கட்டும், உயரமும் முக்கிய தகுதியாக பார்க்கப்படும். அதற்கேற்ப நல்ல உயரமும், உயரத்துக்கு ஏற்ற எடையும் கொண்ட ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நபராக விளங்குகிறார், நரேந்தர் யாதவ். நம்ப முடியாத உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் பின் தொடர்பவராகவும் இருக்கிறார்.

டெல்லியில் உள்ள நஜாப்கர் பகுதியில் நரேந்தர் யாதவ் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் மற்ற இளைஞர்களை போல இயல்பான தோற்றம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். எனினும் உயரத்துக்கு ஏற்ற உடற்கட்டை பேணி இருக்கிறார். அதற்கு கிடைத்த பலனாக 2006-ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்திருக்கிறார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சி முறைகள் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.

2009-ம் ஆண்டு முதல் உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். பயிற்சிக்கு ஏற்ப உணவு வகைகளையும் விரும்பி சாப்பிட பழகிவிட்டார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு உடல் தோற்றத்தில் மாறுபாடு ஏற்பட்டுவிட்டது. உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டார். எனினும் உடல் எடைக்கு ஏற்ப தனது உடற்கட்டு அமைந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கேற்ப கடும் பயிற்சிகளை மேற்கொண்டு கட்டுடல் அழகை பெற்றுவிட்டார்.

அவரது உடற்கட்டு நண்பர்களையே பிரமிக்க வைத்துவிட்டது. 'பாடி பில்டிங்' போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக உடற்கட்டமைப்பை மெருகேற்றுமாறு நண்பர்கள் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதன் பிறகு பொழுது போக்காக மேற்கொண்ட உடற்பயிற்சியை முறைப்படி மேற்கொள்ள பழகி இருக்கிறார். அவரது கவனம் பாடிபில்டிங் போட்டிக்கேற்ற பயிற்சிகள் மீது திரும்பி இருக்கிறது.

தனது கட்டுடலை அதற்கு தயார்படுத்தியவர், 2015-ம் ஆண்டு முதல் போட்டிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். அவரது ஆஜானுபாகுவான தோற்றமும், கட்டுடலை பேணுவதற்காக மேற்கொண்ட உடற்பயிற்சிகளும் போட்டிகளில் வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது. இரண்டு முறை `மிஸ்டர் இந்தியா' பட்டம் பெற்றுவிட்டார். மிஸ்டர் நார்த் இந்தியா, மிஸ்டர் டெல்லி போன்ற பட்டங்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்.

நரேந்திர நாந்தின் உயரம் 5 அடி 8 அங்குலம். உடல் எடை சுமார் 108 கிலோ. தோள்பட்டைக்கும், கை மூட்டுக்கும் இடைப்பட்ட கை பகுதியின் நீளம் 20 அங்குலம். மார்பளவு 58 அங்குலம். எனினும் அவரது இடுப்பளவு 34 அங்குலம்தான். அந்த அளவுக்கு தனது கட்டுடலை பேணி வருகிறார்.

ஒரு நபர் தினமும் 1500 முதல் 2 ஆயிரம் வரையிலான கலோரிகளை கொண்ட உணவுப்பொருட்களை உட்கொள்ளலாம். ஆனால் நரேந்தர் தினமும் சுமார் 5 ஆயிரம் கலோரிகளை உட்கொள்கிறார். கிட்டத்தட்ட 4 பேர் சாப்பிடும் உணவை ஒரே வேளையில் சாப்பிட்டு முடித்துவிடுகிறார். இத்தனைக்கும் உணவை நேர வாரியாக பிரித்துத்தான் உட்கொள்கிறார்.

எத்தனை முறை தெரியுமா? தினமும் 6 வேளை உணவு உட்கொள்கிறார். ஆனாலும் அவர் சாப்பிடும் அளவு அதிகமாக உள்ளது. அவரது தினசரி உணவில் ஒன்றரை கிலோ கோழி இறைச்சி, 20 முட்டை, 10 சப்பாத்தி, 4 ஸ்பூன் புரதம் மற்றும் ஒரு பாக்கெட் பிரெட் ஆகியவை தவறாமல் இடம் பிடிக்கின்றன. அப்படி சாப்பிட்டால்தான் தன் கட்டுடலை சீராக பராமரிக்க முடியும் என்றும் சொல்கிறார்.

சாப்பிடுவது போலவே உடற்பயிற்சி செய்யும் விஷயத்திலும் அவர் சமரசம் செய்து கொள்வதில்லை. காலையில் எழுந்ததும் ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளுடன் அன்றைய நாளின் உடற்பயிற்சியை தொடங்குகிறார். பின்பு கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். வாரத்தில் 5 நாட்கள் அத்தகைய உடற்பயிற்சிகளை தொடர்கிறார். பின்பு 2 நாட்கள் உடற்பயிற்சிகளுக்கு ஓய்வு கொடுத்துவிடுகிறார்.

மிகப்பெரிய உடலமைப்பு காரணமாக ஆடைகள் அணிவதற்கு சிரமப்படுகிறார். ஆடைகளை தேர்ந்தெடுப்பதும், அவற்றை உடல் அமைப்புக்கு பொருத்தமாக தைத்து உடுத்துவதும் சவாலான விஷயமாக இருப்பதாக சொல்கிறார். போலீஸ் சீருடையை தானே அணிந்து கொள்ள முடியும் என்றாலும், காவல் பணி முடிந்த பிறகு அதை கழற்றுவதற்கு மற்றொருவர் உதவி தேவைப்படுவதாக சொல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்