நிலவின் மேற்பரப்புக்கு மிக அருகில் சென்றுவிட்டு மீண்டும் பூமியை நோக்கி திரும்பும் ஓரியன் விண்கலம் - நாசா அறிவிப்பு
டிசம்பர் 11-ம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்,
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, 'ஆர்டெமிஸ்' திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவது அந்த திட்டத்தின் இலக்காகும்.
இதில் முதல்படியாக, மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது. இந்த திட்டம் 'ஆர்டெமிஸ்-1' என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல்.எஸ். ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முதல் படியான 'ஆர்டெமிஸ்-1' திட்டத்தில் நாசா வெற்றிப் பெற்றுள்ளது.
ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. சுமார் 9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. 1972-ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து டிசம்பர் 11-ம் தேதி ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பவுள்ளது என நாசா அறிவித்துள்ளது.ஓரியான் மீண்டும் பூமியை நோக்கி திரும்பி வருகிறது.
முன்னதாக, திங்கள்கிழமையன்று நிலவின் மேற்பரப்பில் இருந்து 130 கி.மீ தொலைவில், மிக நெருக்கமாக இது பறந்துள்ளது. வரும் 11-ம் தேதி ஓரியன் விண்கலம் பூமியை வந்தடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.