வாழ்க்கையை ருசியாக்கும் 'ஊறுகாய் பாட்டி'

விதவிதமான ஊறுகாய் வகைகளை தயார் செய்து 30 ஆண்டுகளாக தனித்துவமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார், அலமேலு அம்மாள். பொண்ணு மாமி என்று அழைக்கப்படும் இவருக்கு 85 வயதாகிறது.;

Update:2022-05-22 16:46 IST

ஆனாலும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறார். ஊறுகாய் பாட்டி என்றால்தான் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியும். அந்தளவுக்கு ஊறுகாயுடன் தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டிருக்கிறார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் வசிக்கும் இந்த ஊறுகாய் பாட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் விற்பனையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதிகம் ஆசைப்படாமல் சிறிய அளவில் லாபம் வைத்து ஊறுகாய் விற்பனை செய்வதே பாட்டியின் தொழில் ரகசியம்.

"எனக்கு கொச்சி மற்றும் வட மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் தயாரிக்கும் ஊறுகாயின் தரத்துக்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். அதனால்தான் என் வாடிக்கையாளர்கள் என்னை மீண்டும் நாடிவருகிறார்கள். ஊறுகாயை வைத்து வருவாயை பெருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஊறுகாய் தயாரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கடின உழைப்பும், இவ்வளவு ஆண்டாக தரமான ஊறுகாயை தயாரிப்பதும்தான் நான் இரவில் நிம்மதியாக உறங்குவதற்குக் காரணம்.

நான் கேரளாவில் உள்ள கண்ணூர் எஸ்டேட்டில் வளர்ந்தவள். இங்கு மாமரங்கள் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே வடு மாங்காயைப் பறித்து ஊறுகாய் போடுவேன். ஊறுகாய் தயாரிக்கும்போது அதிக சிரத்தை எடுத்துக் கொள்வேன். என் உறவினர்களுக்கும் ஊறுகாய் தயாரிப்பது குறித்து சொல்லிக் கொடுத்துள்ளேன்.

எலுமிச்சம் பழம், மருத்துவ குணம் நிறைந்த மகாலி கிழங்கு மற்றும் பல வகை மாங்காய்களை பயன்படுத்தி ஊறுகாய் தயாரிப்பேன். என் குடும்பத்தில் யாரும் ஊறுகாய் தயாரித்தது இல்லை. எனக்கு மட்டும் தான் ஊறுகாய் தயாரிப்பது பிடிக்கும். ஆரம்பத்தில் சிறிய அளவில் வியாபாரத்தை தொடங்கினேன். ஒரு நாளைக்கு ஐந்தரை கிலோ ஊறுகாய் விற்பனையானது. தற்போது தினமும் 10 கிலோ ஊறுகாய் விற்பனையாகிறது.

சராசரியாக மாதந்தோறும் 300 கிலோ ஊறுகாய் தயாரிக்கிறேன். அரை கிலோ ஊறுகாயை ரூ. 200-க்கு விற்பனை செய்கிறேன். விலைவாசிக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்துள்ளேன்.

எவ்வளவு ஊறுகாய் தயாரிக்கிறேன், எவ்வளவு பணம் வருகிறது என்றெல்லாம் நான் பார்த்தது கிடையாது. கையில் பணம் கிடைத்ததும் மாங்காய் மற்றும் ஊறுகாய்க்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுவிடுவேன். எனது தினசரி தேவைக்கு வேண்டிய பணம் வங்கியில் இருக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு என் கணவர் காலமானார். எனக்கு குழந்தைகள் கிடையாது. நான் தனியாகத்தான் இருக்கிறேன். என் கணவர் ராஜா மாதிரி வாழ்ந்தார். கையில் போதுமான பணம் இருந்தால், வட மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். நாங்கள் பெரும்பாலான காலத்தை பயணத்திலேயே செலவிட்டுள்ளோம். இது எனக்கு மன நிறைவை அளிக்கிறது" என்றார்.

ஊறுகாய் பாட்டி வீடு பாலக்காட்டின் பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. பாட்டியின் வீட்டுக்குள் நுழையும்போதே, காய்ந்து கொண்டிருக்கும் மிளகாய் நம்மை வரவேற்கும். உள்ளே நடந்து சென்றால் பெரிய எடை தராசு தொங்கிக் கொண்டிருக்கும். ஊறுகாய் தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கும். இவைதான் அவரின் சொந்தங்களாக வீடு முழுவதும் நிறைந்திருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்