சென்னையில் 17-ந்தேதி முதல்-அமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பேட்டி

சென்னையில் வருகிற 17-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.;

Update:2022-08-09 04:30 IST

சென்னை,

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்போது உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க துணை வேந்தர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் 2013-ம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டது. தனியார் பல்கலைக்கழகமாக இருந்தபோது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மீறி 1,573 பேரை ஆசிரியர்களாகவும், 4,277 பேரை அலுவலக பணியாளர்களாகவும் உபரியாக பணி நியமனம் செய்தனர்.

அந்த பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துகொண்ட பிறகு அளவுக்கு அதிகமாக உள்ள பணியாளர்கள் அரசு பணிகளுக்கு (டெபுடேசன்) மாற்றப்பட்டனர்.

விசாரணை நடக்குமா?

அந்த நிரந்தர பணியாளர்கள் மட்டுமல்லாமல், தற்காலிக பணியாளர்களாக ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கொடுத்து 417 பேரையும் நியமித்திருந்தனர். கடுமையான நிதி நெருக்கடி நிலைமையில் கூட அவர்களுக்கு பணியை 3 மாதத்திற்கு நீட்டித்து, ஊதியம் அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். பணி நீட்டிப்பை மேலும் அவர்கள் கோரி வருகின்றனர். அவர்களின் நிலை பற்றியும் ஆலோசித்தோம்.

இந்த விவகாரத்தில் விசாரணை செய்யப்படுமா? என்றால், நடந்தது நடந்துவிட்டது. இனி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும். இந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு எடுத்துக்கொண்ட பிறகு, அந்த பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு ரூ.10 கோடி வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கும்.

துணை வேந்தர்கள் மாநாடு

இதையெல்லாம் முதல்-அமைச்சரிடமும் ஆலோசித்து முடிவு எடுப்பதற்காக வருகிற 17-ந் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர்களின் மாநாட்டை சென்னையில் முதல்-அமைச்சர் கூட்டியுள்ளார். சில இடங்களில் பாடத் திட்டங்களில் பிரச்சினை உள்ளது. தமிழ், ஆங்கிலம் மொழிப்படிப்பில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன? என்பது பற்றி இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் முன்பு பேசப்படும்.

மொழிப்பாடங்கள் அனைத்து பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரியாக, இருப்பது குறித்தும், அதை செயல்முறைபடுத்துவது குறித்தும் முதல்-அமைச்சர் தலைமையிலான இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கவர்னர் தடையாக இருப்பாரா? என்று கேட்டால், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த மாநாடு நடைபெறுகிறது. பாடத்திட்டங்களை நிர்ணயிக்க அரசுக்கு உரிமை உள்ளது. நான் முதல்வன் திட்டம், அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும், என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் செயல்படுத்துவது தொடர்பாக துணை வேந்தர் மாநாட்டில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு சேரும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்