உரிய ஆவணங்கள் இன்றி சிமெண்டு ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு அபராதம் விதித்த வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் உளுந்தூர்பேட்டையில் 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிமெண்டு ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு அபராதம் விதித்த வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-09 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

கடலூர் கோட்ட துணை வணிகவரித்துறை அலுவலர் சாந்தாராம் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆசனூர் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து சிமெண்டு ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த சிமெண்டு மூட்டைகளை உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் பகுதிக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரியை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் மகன் மதுரக்காரன் என்பவரிடம் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து டிரைவருக்கு ரூ.92 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதிகாரிகளுக்கு மிரட்டல்

இதற்கிடையே இதுபற்றி அறிந்த ஆசனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(20) என்பவர் மினிலாரியில் வந்து லாரியின் முன்னால் நிறுத்தியும், அதே பகுதியை சேர்ந்த கவுதம்(19) என்பவர், காரில் வந்து லாரியின் பின்னால் நிறுத்தியும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களை மிரட்டினர்.

மேலும் அவர்கள் மதுரக்காரன் உதவியுடன் லாரியை அங்கிருந்து எடுத்து சென்றனர். இதுகுறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் எடைக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 3 வாகனங்களையும் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கவுதம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். டிரைவர் மதுரக்காரனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்