3-வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூர தாய்
குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கலாசூர்யாவிடம் கூறியுள்ளார்.;
மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் தென்காசி பகவதிபுரத்தை சேர்ந்த கண்ணன் (25 வயது) என்பவர் வேலை பார்த்து வந்தார். அதேபோல் கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த கலாசூர்யா (25 வயது) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார்.
கலாசூர்யாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் ஆகி அவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதில் 2-வது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் கலாசூர்யாவுக்கும், கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கலாசூர்யாவிடம் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 5-ந் தேதி கலாசூர்யா கடைக்கு சென்றிருந்தார். அப்போது கண்ணன், அந்த 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதுபற்றி அறிந்த கலாசூர்யா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதி புதரில் வீசிவிட்டு சென்றனர்.
இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கலாசூர்யா கோபித்துக்கொண்டு கேரளாவில் உள்ள தனது தாய் சந்தியாவின் வீட்டிற்கு சென்றார். அவரிடம் குழந்தை எங்கே? என சந்தியா கேட்டுள்ளார். அப்போது கலாசூர்யா சரிவர பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்த சந்தியா, புனலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கேரள போலீசார், செக்கானூரணி போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.
இதை அறிந்த கண்ணன் நேற்று கரடிக்கல் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் முன்னிலையில் சரண் அடைந்தார். தொடர்ந்து, செக்கானூரணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் குழந்தையை கொன்று புதரில் உடலை வீசியதாக கூறினார். அவரையும், கலாசூர்யாவையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர். சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், குழந்தையின் எலும்புகளை மீட்டனர். அவற்றை ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.