முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே கீழஈராலை சேர்ந்த ஒரு இளம்பெண், கோவில்பட்டி காந்திநகரைசை் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழஈராலை சேர்ந்த சீனித்தம்பி மகள் சீனிரச்சனா (வயது 19). இவர் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த பிரியதர்ஷன் என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர். மதுரை மாட்டுதாவணி அருகே வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில், சீனிரச்சனாவை அவரது கணவர் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சீனித்தம்பி உடனடியாக மதுரை சென்று, மகளை மீட்டு மாட்டுதாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் மகளை கீழஈராலில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இதையறிந்த பிரியதர்ஷன், அவரது நண்பர்களான மதுரை கே.கே.நகரை சேர்ந்த கண்ணன் மகன் விக்னேஷ்குமார், கண்ணனேந்தலை சேர்ந்த வைரமுத்து மகன் சாரதி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த 2 பேருடன் கடந்த 3ம் தேதி கீழஈரால் வந்து, சீனித்தம்பி வீட்டின் கதவை தட்டிப் பிரச்சினை செய்துள்ளனர்.
இதையடுத்து அவர், தனது உறவினரான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பச்சைப்பாண்டியனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகன் முத்துக்குமாருடன் அவர் அந்த வீட்டுக்கு சென்று பிரியதர்ஷன் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களை அவதூறாக பேசிவிட்டு பிரியதர்ஷன் உள்ளிட்டோர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர் பச்சைப்பாண்டியன், முத்துக்குமார், சீனித்தம்பி ஆகியோர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த விக்னேஷ்குமார், சாரதி ஆகியோர் திடீரென்று சின்னத்தம்பி உள்ளிட்டோரை காரை ஏற்றி கொல்ல முயன்றுள்ளனர். சுதாரித்து கொண்ட அவர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனாலும் கார் மோதியதில் பச்சைப்பாண்டியன் காயமடைந்தார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷ்குமார்(22), சாரதி(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.