வேலூரில் குழந்தை உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வேலூரில் குழந்தை உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.;

Update:2023-09-14 17:19 IST

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கொசுக்களால் பரவும் இந்நோய் ஆபத்தானது என்பதால் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகளும், சுகாதார நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்ட சுகாதார துறை மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. வீடுகளில் தண்ணீர் தேங்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். வேலூர் மாநகராட்சி சார்பிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலமும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடக்கிறது.

இந்தநிலையில் மாநகராட்சி பகுதியில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஓட்டேரி பலவன்சாத்துகுப்பத்தில் இளம்பெண்ணுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவருக்கு சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது.

சுகாதாரப்பணிகள்

இதேபோல சலவன்பேட்டையில் ஒரு ஆண் குழந்தையும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம், டெங்கு கொசு ஒழிப்பு பணி, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்