இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு

அமெரிக்க செயற்கைகோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்த இருக்கிறது.;

Update:2025-12-22 23:08 IST

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது பயன்பாட்டுக்கு போக பி.எஸ்.எல்.வி. மற்றும் எல்.வி.எம்.-3 ராக்கெட்டுகளை பயன்படுத்தி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ் போன்ற 30-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 390-க்கும் அதிகமான வெளிநாட்டு செயற்கைகோள்களை வணிக அடிப்படையில் விண்ணில் ஏவியுள்ளது. இதன் மூலம் இந்தியா கணிசமான அந்நிய செலாவணி வருமானத்தையும் ஈட்டியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம் தகவல் தொடர்பு சேவைக்காக 6 ஆயிரத்து 500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்' செயற்கைகோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு செல்போன் சேவை, அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைகோளை ‘இஸ்ரோ' விண்ணில் செலுத்த உள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் ‘இஸ்ரோ’வின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.54 மணிக்கு எல்.வி.எம். 3 ராக்கெட் வாயிலாக ‘புளூபேர்ட்' செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வரும் நிலையில் இதன் 24 மணிநேர கவுன்ட்டவுன் நாளை காலை தொடங்க இருக்கிறது.

இஸ்ரோவில், பெரிய திட்டங்கள் செயல்படுத்தும் போது அதன் மாதிரிகளை திருப்பதியில் பெருமாளின் பாதத்தில் வைத்து விஞ் ஞானிகள் வழிபடுவது வழக்கம். அதன்படி அமெரிக்க செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் திட்டம் வெற்றி பெற இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் வழிபாடு நடத்தினார். ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் மாதிரியை எடுத்து வந்து பெருமாளின் பாதத்தில் வைத்து நாராயணன் மற்றும் இஸ்ரோ குழுவினர் வழிபட்டனர். அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாரதங்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்