விஜயும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் - திருமாவளவன் எம்.பி காட்டம்

பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழகத்தில் நுழைய முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.;

Update:2025-12-22 21:29 IST

மதுரை,

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலைக் கண்டித்து மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் திருமாவளவன் பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரம் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டம். எப்படியாவது மதப்பிரச்சினையை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றனர். பாஜகவின் ஜம்பம் பீகாரில், உத்தரபிரதேசத்தில் பலிக்கலாம். தமிழ்நாடு தனித்தன்மை வாய்ந்த மாநிலம். தமிழ்நாட்டில் உங்கள் ஜம்பம் பலிக்காது.பாஜக எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழகத்தில் நுழைய முடியாது.

திமுகவை ஒரு தீய சக்தி என்று விஜய் சொல்கிறார். அவர் முடிந்தால் திமுகவை அழித்து விட்டு போகட்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. விஜய் ஆர்எஸ்எஸ்க்காக கட்சி தொடங்கியுள்ளார். அவர்கள் திமுகவோடு பெரியார், அம்பேத்கர் கொள்கைகளையும் அழிக்க பார்க்கிறார்கள்.

விஜய் நேரடியாக பைனல் விளையாடி ஆட்சிக்கு வர முயல்கிறார், விஜய் செய்வது அரசியல் அறியாமை. எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் விஜயின் பின்னால் போயிருப்பேன். எங்களுக்கு சீட் முக்கியமில்லை கொள்கை தான் முக்கியம். யாருக்கும் விசிக முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. விஜயும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.

சீமான் பிரபாகரன் பெயரை சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற கணக்கு போட வேண்டாம். தமிழ் தேசியம் என்ற கடப்பாரையை கொண்டு திமுக கோட்டையை இடிக்க நினைத்தால் பிரச்சினையில்லை. ஆனால் பார்ப்பனியம் என்ற கடப்பாரையை கொண்டு திமுக கோட்டையை, திராவிட கோட்டையை இடிக்க நாங்கள் விட்டுவிடுவோமா? நாங்களும் திமுகவை விமர்சித்து உள்ளோம். ஆனால் இங்கே பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தலைதூக்க முயற்சிக்கும்போது நாங்கள் திமுகவுடன் இணைந்து தான் உங்களை வீழ்த்த முடியும்.

எங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் பேசும் அரசியலை திமுகவும் பேசுகிறது. அதில் அவர்கள் உறுதியாக இருப்பதால் நாங்கள் அவர்களோடு கைகோர்த்துள்ளோம். எங்களுக்கு இரண்டு சீட்டா, நான்கு சீட்டா என்பது முக்கியம் இல்லை. பிறர் என்னை நினைப்பார்கள். நமக்கு ஓட்டு வருமா? வராதா? இல்லை இப்படி பேசினால் திமுக கூட்டணியில் வச்சியிருக்குமா? என்பது குறித்து எனக்கு கவலையில்லை. நாளையே திருமாவளவனை கூட வைத்திருப்பது நமக்கு பிரச்சினை என திமுக நினைத்தாலும் கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்