தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
கோவையில் பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
காட்டூர்
கோவையில் பெண் ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம் பெண் தற்கொலை
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களின் மகள் அனுப்பிரியா (வயது 25). இவர் கோவை காட்டூர் காளப்பன் லே-அவுட்டில் வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி இருந்து செல்லப்பன் வீதியில் உள்ள ஒரு மெட்டல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அனுப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு அனுபிரியாவின் உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அவர்கள், வேலைபார்த்த இடத்தில் அனுப்பிரியாவுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் தற்கொலை செய்ததாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அது வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர். அவர்களிடம் காட்டூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று உறவினர்கள் அனுப்பிரியாவின் உடலை பெற்றுச் சென்றனர்.
இதையடுத்து போலீசார் தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கடையில் வேலை பார்க்கும் திலகவதி, நாகராஜ் ஆகியோருக்கும், அனுப்பிரியாவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இது குறித்து அனுப்பிரியா காட்டூர் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.
போலீசார் எச்சரிக்கை
அதைத்தொடர்ந்து போலீசார் அந்த மெட்டல் நிறுவனத்திற்கு சென்று அனுப்பிரியாவிடம் தகராறு செய்த திலகவதி, நாகராஜ் ஆகியோரை எச்சரித்தனர். இது குறித்து அவர்கள் 2 பேரும் நிறுவன உரிமையாளர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர்.
உடனே அவர் அனுப்பிரியாவை தனது அலுவலகத்துக்கு அழைத்து கண்டித்து உள்ளார். மேலும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு, இனி வேலை வர வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த அனுப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து அனுப்பிரியாவை தற்கொலைக்கு துண்டிய தாக வழக்கு பதிவு செய்து மெட்டல் நிறுவன உரிமையாளரான ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சிவக்குமார் (36), ஊழியர் நாகராஜ் (38) ஆகிய 2 பேரையும் காட்டூர் போலீசார் கைது செய்தனர். திலக வதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.