சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சேலம் நெய்க்காரப்பட்டியில் சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சேலம் நெய்க்காரப்பட்டியில் சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதன்படி சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சேலம் குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை நெய்க்காரப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அரிசியை கடத்தி வந்த ஆட்டையாம்பட்டியை சேர்ந்த செந்தில்முருகன் (45), ராமச்சந்திரன் (23), லிங்கேஸ்வரன் (27) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதனை ஆட்டையாம்பட்டி பகுதிகளில் உள்ள பலகார கடைகள், ஆடு, மாடு, குதிரை வைத்திருப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.