மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் தான் நிறுவ முடியும் திருநாவுக்கரசர் பேட்டி

மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் தான் நிறுவ முடியும் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

Update: 2017-11-22 20:30 GMT
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதசார்பற்ற ஆட்சி

ராகுல்காந்தி தலைவராக வர வேண்டும் என இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் விரும்புகின்றனர். மோடி ஆட்சியை நீக்கி, மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் தான் நிறுவிட முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறும், வளம்பெறும். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி வரும்.

ஆர்.கே.நகர் ஒரு தொகுதியிலேயே 46 ஆயிரம் போலி வாக்காளர்கள் என்றால், மற்ற எல்லா தொகுதிகளிலும் எத்தனை பேர் என்று சொல்ல முடியவில்லை. எனவே, அவற்றை நீக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.

பிரதமரை உட்படுத்த வேண்டும்

ஜெயலலிதா மரணம் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம், அதனை அரசு அல்லது ஆஸ்பத்திரி வெளியிடும். தவறு செய்தவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொள்வதில்லை. எனவே நீதி விசாரணை நடத்த வேண்டும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டோம்.

தற்போது நீதிவிசாரணை நடக்கிறது. ஒருவேளை நீதிபதி என்னை விசாரணைக்கு அழைத்தால், சந்தோஷமாக சென்று எனக்கு தெரிந்தவற்றை கூற தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்றபோது, மோடி ஏன் வரவில்லை. எம்.ஜி.ஆரை. வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததை போன்று ஏன் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை. எனவே, பிரதமரையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் போன்றவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பட்டுக்கோட்டை மகேந்திரன் ஏற்பாட்டின் பேரில், தஞ்சை மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் பலர் திருநாவுக்கரசர் முன்னிலையில் மீண்டும் காங்கிரசில் இணைந்தனர்.

மேலும் செய்திகள்