நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் தமிழ்நாடு அரசு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலர் பலியான சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-23 22:00 GMT
சென்னை, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக்கூடாது, அதை உடனே நிரந்தரமாக மூடவேண்டும் என்று கடந்த 99 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். 100-வது நாளான நேற்றுமுன்தினம் (22-ந் தேதி) நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தலைமைச் செயலாளர் கிரிஜா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை அழைத்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்கள் பற்றி கேட்டறிந்தார்.

இந்தநிலையில், நேற்று காலையிலும் தூத்துக்குடி சம்பவம் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக அறையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.சி.கருப்பண்ணன், ரா.காமராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 22-ந் தேதி பல்லாயிரக்கணக்கான நபர்கள் 144 தடை மீறி முற்றுகையிட்டனர்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி அருணா ஜெகதீசன் மானாமதுரையைச் சேர்ந்தவர். 26.3.1953 அன்று பிறந்தார். சென்னையில் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி மற்றும் ராணிமேரி கல்லூரியில் படித்தார். சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை படித்தார்.

23.8.1978 அன்று வக்கீலாக பதிவு செய்தார். 1989-ம் ஆண்டு மாவட்ட சார்பு நீதிபதியானார். 1997-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். பல்வேறு பதவிகளை வகித்த அருணா ஜெகதீசன், ஐகோர்ட்டு விஜிலன்ஸ் பதிவாளராக பணியாற்றினார்.

இவரது கணவர் ஜெகதீசன் வக்கீல் தொழிலாற்றுகிறார். ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக 31.3.2009 அன்று பதவி ஏற்ற அருணா ஜெகதீசன், 25.3.2015 அன்று ஓய்வு பெற்றார்.

மேலும் செய்திகள்