எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘தமிழ் ரத்னா’ விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

நியூஸ்-7 தொலைக்காட்சி சார்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதினை வழங்கினார்.

Update: 2019-10-22 20:30 GMT
சென்னை,

நியூஸ்-7 தொலைக்காட்சி சார்பில் ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து பல்வேறு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதன்படி கலை ரத்னா விருது கட்டைக்கூத்து ராஜகோபால், இலக்கிய ரத்னா விருது தொ.பரமசிவன், நாடக ரத்னா விருது பிரளயன், விளையாட்டு ரத்னா விருது சதீஷ் சிவலிங்கம், சேவை ரத்னா விருது ரவீந்திரகுமார், ஆசிரியர் ரத்னா விருது கோவிந்த பகவான், தொழில் ரத்னா விருது சிபி செல்வன், மகளிர் ரத்னா விருது பாரதி பாஸ்கர், யுவ ரத்னா விருது விழியன், சக்தி ரத்னா விருது திருநங்கை நளனா பிரசீதா ஆகியோருக்கும், இசை ரத்னா விருது ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற கானா பாடல் குழுவினருக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல கிரேஸி மோகன், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கிரேஸி மோகன் சார்பில் அவருடைய சகோதரர் மாதுபாலாஜி விருதினை பெற்றார். வாழ்நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் ‘தமிழ் ரத்னா’ விருது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. அவருடைய சார்பில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்த ஜெயஸ்ரீ விருதினை பெற்றார்.

விருதுகளை வழங்கிய பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அரசும், ஊடகமும் இணைந்து செயல்பட்டால் தான் மக்களாட்சி தழைத்தோங்கும். அரசு திட்டங்களால் பயன்பெறும் வெற்றி பெற்றவர்களின் கதைகளை வெளியிட்டு மக்களிடையே ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருந்தபோதிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து தொலைக்காட்சிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் தான் இதை முழுமையாக செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நீதிபதி கிருபாகரன் பேசுகையில், ‘யாருக்கும் சாதகமாக இல்லாமல் செய்திகள் செய்தியாக இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகளை தமிழர்களின் தொன்மைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி குழந்தைகளை தொன்மையான இடங்களுக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், சுரேஷ்குமார், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, கே.பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், நியூஸ்-7 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம், ஆச்சி மசாலா குழும தலைவர் பத்மசிங் ஐசக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்