சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்பு; 16,524 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த காய்ச்சல் முகாமில் 16.46 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் இதில் 16,524 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-06 18:48 GMT
சென்னை, 

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது.

இதற்காக மாநகராட்சி சார்பில் பிரத்யேகமாக டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான களப்பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் இதுவரை 28 ஆயிரத்து 710 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒரு முகாமில் சராசரியாக 57 பேர் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில், இதுவரை 16 லட்சத்து 46 ஆயிரத்து 362 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 93 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. அதில் 88 ஆயிரத்து 247 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் 16 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்