பெல்ஜியம், நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு பார்சலில் ரூ.1½ கோடி போதை மாத்திரைகள் கடத்தல்

பெல்ஜியம், நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு பார்சலில் ரூ.1½ கோடி போதை மாத்திரைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2020-08-13 03:48 IST
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாட்டில் இருந்து காஞ்சீபுரம், ஆந்திராவில் உள்ள முகவரிகளுக்கு 2 பார்சல்கள் வந்தன.

பெல்ஜியத்தில் இருந்து காஞ்சீபுரத்துக்கு வந்த பார்சலில் அலங்கார பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த பார்சலை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது அதில் போதை பொருள் மாத்திரைகள் கடத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் இருந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 4,060 ‘எக்ஸ்டலி’ போதை மாத்திரைகளை கைப்பற்றினார்கள்.

அதேபோல் நெதர்லாந்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த பார்சலில் உணவு பொருட்கள் இருப்பதாக இருந்தது. இந்த பார்சலையும் பிரித்து பார்த்தபோது அதில் போதை மாத்திரைகளும், ‘மெத்’ என்ற போதை பவுடரும் இருந்தன.

ரூ.45 லட்சம் மதிப்புள்ள 1,150 போதை மாத்திரைகள், உயர்ரக போதை பவுடர் இருந்ததை கண்டுப்பிடித்தனர். இதையடுத்து 2 பார்சல்களில் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட விலையுயர்ந்த 5,210 போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. ஆந்திராவில் உள்ள முகவரிக்கு சென்றபோது போதை மாத்திரைகளை பார்சலில் வரவழைத்த வாலிபரை கைது செய்தனர். இவர் ஏற்கனவே போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் போதை பொருட்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கைதான வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 மாதத்தில் ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து 8-வது முறையாக போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

கொரோனா காலத்தில் பன்னாட்டு விமான சேவைக்கு உலகம் முழுவதும் பல நாடுகள் தடை விதித்து இருந்தாலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெறுவதற்காக சரக்கு விமான சேவையை தொடர்ந்து செயல்படுத்தும் போது, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபடுவதாக அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்