பா.ஜ.க. அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி; ரபேல் போர் விமான மாதிரியில் விநாயகர் சிலை

பா.ஜ.க. அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, ரபேல் போர் விமானத்தின் மீது ஒய்யாரமாக அமர்ந்திருப்பது போன்று விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.;

Update:2020-08-23 03:15 IST
சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 18 கரங்கள் கொண்ட விநாயகர் சிலைக்கு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பூஜை செய்து வழிபட்டார். பொதுச்செயலாளர்கள் கேசவ விநாயகம், கரு.நாகராஜன் மற்றும் காயத்ரி ரகுராம், சதீஷ்குமார், சி.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரபேல் போர் விமானத்தின் மீது ஒய்யாரமாக அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலை பார்த்தவர்களை பிரமிக்க வைத்தது. விநாயகரின் 18 கரங்களிலும் மத்திய அரசின் சாதனைகள் தொடர்பான விளக்க வாசகங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், பெண்களுக்கான இலவச கியாஸ் இணைப்பு திட்டம், மீனவர்கள் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம், மேக் இன் இந்தியா உள்பட திட்டங்கள் விநாயகரின் ஒவ்வொரு கரங்களிலும் இடம் பெற்று இருந்தன. மேலும் ஒரு கையில் தேசிய கொடியும், இன்னொரு கையில் பா.ஜ.க. கொடியும் இருந்தது.

விழாவில் எல்.முருகன் நிருபர்களிடம் பேசுகையில், “விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவரும் உள்துறை மந்திரி அமித்ஷா, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எச்.வசந்தகுமார் எம்.பி. உள்ளிட்டோர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டினோம். வருகிற சட்டமன்றத் தேர்தலில் இந்து மக்களின் மத உணர்வு நிச்சயம் எதிரொலிக்கும்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்