கடகம்: புத்தாண்டு ராசிபலன் 2026: இந்த ஆண்டு முழுவதும் இந்த நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது..!

கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பணி அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கைகூடும்.;

Update:2025-12-21 11:02 IST

கடகம்

கடக ராசியினருக்கு ஆன்மீக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் முன்னேற்றம் தரும் ஆண்டு இது. ஏனென்றால், பாக்கிய, தொழில், லாப ஸ்தான அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு பெற்றுள்ளார்கள். உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் பல கிரகச் சேர்க்கை இருப்பதால் வேலையற்றோருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தன ஸ்தானம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் ராகு, கேது இருந்தாலும், குருவின் பலம் காரணமாக சிக்கல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

நீண்ட காலம் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நல்ல விதமாக கைகூடி வரும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் மற்றும் பொதுவாழ்வில் உள்ளவர்கள் பொறுமையாக இருக்க வேண்டிய காலம் இது. உங்களுக்கான அங்கீகாரம் மெதுவாகவே வந்து சேரும். பல நல்ல விஷயங்களைக்கூட ரகசியமாக செய்து முடிக்க வேண்டிய காலகட்டம் இது.

குடும்பம், நிதிநிலை

குடும்பத்தில் சில சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். எந்த விஷயத்திலும் வெளிப்படையாக உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும். சுப காரியங்கள் நடக்க இருப்பதால் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பெற்றோர்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் விஷயத்திலும், வாழ்க்கைத் துணையின் தாய், தந்தையர் விஷயங்களிலும் அதிகம் தலையிட வேண்டாம்.

நிதிநிலையை பொறுத்தவரை செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கைகளில் சிறிது பணம் வந்தாலும் கூட பழைய கடன்களை அடைத்து விடுங்கள். வர்த்தக ஊக பேரங்களில் ஈடுபடக்கூடாது. கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மிக கவனம் தேவை.

தொழில், உத்தியோகம்

தொழில் நிலவரத்தை பொறுத்தவரை பலரை வைத்து வேலை வாங்கும் தொழில் மற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் ஆகியவை விரிவடையும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வார்கள். வர்த்தக விரிவாக்கம் இந்த ஆண்டு உண்டு. கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் எதிர்பார்த்த நல்ல பணி அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கைகூடும். பணியிடத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக முதுநிலை அலுவலர் ஆலோசனை பெறுவது அவசியம். நிர்வாகத்தின் முடிவுகள் கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வது எதிர்கால நலனுக்கு நல்லது.

கலை, கல்வி

சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஊடகத் துறையினருக்கு படைப்புத் திறனை வெளிப்படுத்தும் காலகட்டம் இது. உங்கள் உள்ளுணர்வுகளை காட்சிகளாக வடிவமைக்க காலம் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கும். அதனால் பாராட்டுக்கள் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் வாய்ப்புகள் மூலம் உங்களுடைய புகழ் ஓங்கும்.

கல்வியை பொறுத்தவரை அறிவியல், தத்துவம் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு சாதனை புரிவார்கள். வெளிநாடு செல்ல ஆர்வமாக இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீட்டு கதவை வந்து தட்டும். ஏற்கனவே விண்ணப்பம் செய்து விசா கிடைக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

நன்மைகள் நாடி வர..

இரவு நேரங்களில் உடல் நல பாதிப்பு, தூக்கம் இல்லாத நிலை ஏற்படலாம். நல்ல ஓய்வு அவசியம். செரிமானம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்ல வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. அன்னை மற்றும் அன்னை வழி உறவினர்களுக்கு ஆடைகள் மற்றும் அழகிய பரிசு பொருள்கள் வழங்குவது நன்மை தரும்.

பௌர்ணமி நாட்களில் அருகிலுள்ள பெண் தெய்வ கோயில்களில் பசும்பால் அபிஷேகத்திற்கு தருவது நன்மை பல தரும். அத்துடன் சிவலிங்கத்துக்கு வெள்ளை வஸ்திரம் வழங்குவதும், கோயிலில் உள்ள கருப்பு பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை, காய்கறிகள் உண்பதற்கு கொடுப்பதும் நன்மை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் கருப்பு நிற ஆடைகளை அணியாமல் தவிர்ப்பது நல்லது.

கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்

Tags:    

மேலும் செய்திகள்