ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-13 12:50 GMT
சென்னை,

ஆம்னி பஸ்களில்  கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது; போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் கடந்த 11.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்தல் சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்காலங்களை முன்னிட்டு மக்கள் பெரிதளவில் தமது சொந்த ஊர் செல்லும் போது ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவின்படி, 13.10.2021 முதல் 20.10.2021 வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப்  பஸ்கள் மற்றும் தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்தாத ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகின்றது. பொதுமக்கள் ஆம்னி பஸ்களுக்கான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்