திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

பெண்கள் முன்னேறினால் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.;

Update:2025-12-29 18:56 IST

கோவை,

திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் கூடியுள்ள மகளிரைப் பார்க்கும் போது, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகத் தெரிகிறது. எப்போதுமே தி.மு.க. தேர்தல் அறிக்கையே ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறோம். அது உறுதி. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. திரண்டுள்ள மகளிர் அணியைப் பார்க்கும் போதே பவர் ஃபுல்லாக இருக்கிறது. நிறைய இளம்பெண்கள் கூட்டத்தில் பங்கேற்றதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. கூட்டம் பவர் ஃபுல்லாக மட்டும் இல்லை; உமன் பவரால் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதாக உள்ளது. தொடக்கம் முதலே திராவிட இயக்கத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றார்கள். பெண்கள் படிக்கக் கூடாது, அடுப்படி தாண்டக் கூடாது என்று கூறி அடிமைப்படுத்தப்பட்டனர். அதையெல்லாம் உடைத்தெறிந்தது திராவிட இயக்கம்தான்.

பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. பெரியார் கட்டியெழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தால் பெண்கள் அடைந்த வளர்ச்சியை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்.உள்ளாட்சியில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. தான். உள்ளாட்சி அமைப்புகள் போல, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களுக்கு இடம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை.

உரிமைத்தொகை திட்டம் நிறைய பெண்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. 1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதுவரை 28 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளோம்.பெண்களின் கல்வி உரிமை மற்றும் சம உரிமைக்காக பாடுபடுவது திராவிட இயக்கம். கடந்த வாரம் ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் செல்போன்களை அசெம்பிள் செய்வதே பெண்கள்தான். தமிழ்நாட்டில்தான் பெண் மேயர்கள் அதிகமாக உள்ளனர்.தேவையே இல்லாத நிபந்தனைகளுடன் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியது.

முதல்வரானதும் எனது முதல் கையெழுத்து ‘விடியல்’ பயணத் திட்டத்துக்குத்தான். புதிய வாய்ப்புகளைத் தேடி பெண்கள் ஏராளமானோர் விடியல் பயணம் மேற்கொள்கிறார்கள்.பெண்கள் வேலைக்கு சென்றாலும், நடைமுறையில் இருக்கும் பெரிய சிறை சமையல் அறைதான். மகளிர் சுமையை குறைக்கும் திட்டமாக காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண் கல்விக்கு தி.மு.க. அரசு முக்கியத்துவம் தந்துள்ளது. கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. 100 வேலை திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியதாக பச்சைபொய்யை எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். சங்கிகளே வெட்கப்படும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கொடுக்கிறார். கமலாலய அறிக்கையை அதிமுக லெட்டர் பேடில் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்” இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்