151 அழகு நிலையங்கள்- மசாஜ் நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை
சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது, மாநகராட்சி வழிகாட்டுதல்களை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
சென்னை,
சென்னை மாநகர் முழுவதும் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 63 மையங்கள் மீது உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரம் விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போலீஸ் ஆய்வாளர்கள் சரவணன், சாம் வின்சென்ட் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து, அவர்கள் பணியாற்றிய போது முறைகேடாக சில மசாஜ் சென்டர்களுக்கு லஞ்சம் பெற்று அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் தியாகராய நகர், வடபழனி, அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 151 அழகு நிலையங்களிலும் மசாஜ் நிலையங்களிலும் போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் முறையான அனுமதி பெறாதது, சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது, மாநகராட்சி வழிகாட்டுதல்களை பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.