சொந்த ஊர்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்
சொந்த ஊர்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்;
கோவை
கொரோனா 3-வது அலை அச்சம் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கிறார்கள்.
வடமாநில தொழிலாளர்கள்
கோவை மாவட்டத்தில் தனியார் மில்கள், கட்டிட தொழில் உள்பட ஏராளமான தொழில்களில் பீகார், ஒடிசா, மராட்டியம், உத்தரபிர தேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் வாழ்வாரம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கையாக வடமாநில தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தினருடன் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
ரெயிலில் திரும்புகின்றனர்
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் கோவைக்கு வந்தனர். அவர்கள் ரெயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
இதனால் கோவை ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.இது குறித்து ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி நீரு (வயது 30) கூறியதாவது,
நான் கடந்த 2006-ம் ஆண்டு முதல் கோவையில் உள்ள மாவு மில்லில் வேலை செய்து வருகிறேன். கடந்த ஊரடங்கின் போது உணவிற்கே மிகவும் சிரமப்பட்டேன்.
தற்போது கொரோனா காரணமாக வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.
மேலும் ஊரடங்கு அறிவித்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு செல்ல உள்ளேன்.
இதற்காக தட்கலில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தேன். கொரோனா தொற்று குறைந்த பிறகு மீண்டும் தமிழகம் வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா 3-வது அலையின் அச்சம் காரணமாக வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் கோவையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் தொழில் துறையினர் கவலை அடைந்து உள்ளனர்.