அரியலூர் மாணவி தற்கொலை; 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 3-வது நாளாக விசாரணை நடத்திவருகின்றனர்.

Update: 2022-03-02 10:01 GMT
தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டியில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் விடுதியில் அரியலூரை சேர்ந்த மாணவி தங்கியிருந்த 12-ம் வகுப்பு படித்துவந்தார்.

இந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 19-ம் தேதி உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில் பள்ளி விடுதி வார்டன் தன்னை தூய்மை பணிகள் செய்ய சொன்னதால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்பதால் விஷம் குடித்ததாக மாணவி வாக்கு மூலம் கொடுத்ததன் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டனை கைது செய்தனர்.

மாணவி தற்கொலை மதமாற்றத்துக்கு கட்டாயப்படுத்தியதால் நடந்தது என்று வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கிடையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி அல்லது வேறு அமைப்புக்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதைத்தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. விசாரணைக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ துணை இயக்குநர் வித்யாகுல்கர்னி தலைமையிலான குழுவினர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மைக்கேல் பட்டி பள்ளி விடுதியில் விசாரணை செய்தனர். 

இந்த நிலையில் தற்போது விசாரணையை தொடங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்த விசாரணையின் போது விடுதி பணியாளர்கள், விடுதி பதிவேடுகள் போன்வற்றை ஆய்வு செய்தனர்.  இந்த விசாரணை நேற்று இரவு 8 மணி வரை நீடித்தது. 

தற்போது 3-வது நாளாக விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடங்களில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

மேலும் செய்திகள்