3 மாதமாக சம்பளம் வழங்காததால் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

Due to non-payment of salary for 3 months, sanitation workers are on strike;

Update:2022-11-15 22:05 IST

ஆரணி

3 மாதமாக சம்பளம் வழங்காததால் ஆரணி நகராட்சியை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூய்மை பணியாளர்கள்

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 18-வது வார்டு வரை தனியார் தூய்மை பணியாளர்களும், 19 முதல் 33-வது வார்டு வரை நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையாக வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளரிடமும், மேலாளர் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், கள மேலாளர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டனர். சம்பளம் வழங்கப்படாததால் செலவை சமாளிக்க கடன் வாங்கியிருந்தோம். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வருகின்றனர்.

வங்கிகளில் கடன் பெற்றிருப்பதால் அவர்களும் எங்களுக்கு நோட்டீசு அனுப்புகின்றனர். எனவே சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

முற்றுகை

ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனை தொடர்ந்து தங்களுக்கு 3 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நிரந்தர தூய்மை பணியாளர்கள் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களிடம் நகராட்சி சுகாதார தனி அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், கள மேலாளர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆணையாளரிடம் பேசிய பின்னர் தனி அலுவலர், ''தற்போது வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்'' என கூறினார். அதற்கு தொழிலாளர்களும் 2 மாத சம்பளத்தை ஒரே முறையாக வழங்குங்கள் அப்படி கொடுத்தால் மட்டுமே எங்களால் கடன் தொல்லையில் இருந்து மீள முடியும் என கோரிக்கை வைத்தனர்.

ஒரு வார காலத்திற்குள் உங்களுக்கு 2 மாத சம்பளத்தையும் வழங்கி விடுகிறோம் என பதிலளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்