கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.;

Update:2022-07-21 22:26 IST

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள குமளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40), விவசாயி. இவர் கடந்த 2014-ம் ஆண்டில் பட்டா மாற்றம் செய்வதற்காக அப்போதைய குமளம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனிவாசன் (35) என்பவரை அணுகி மனு கொடுத்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து பட்டா மாற்றம் செய்து தர ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாக தர வேண்டுமென சீனிவாசன் கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்யனார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு வாக்கூர் என்ற இடத்தில் வைத்து கிராம உதவியாளரான ரமேஷிடம் கொடுத்தார். அந்த பணத்தை அவர் பெற்று சீனிவாசனிடம் கொடுக்க முயன்றபோது அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலருக்கு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும், ரமேசை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்