ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்... ஆனால் - வீரபாண்டியன் பேட்டி
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அதிபரை அமெரிக்கா கைது செய்துள்ளது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை ஆகும். பிரதமர் நரேந்திரமோடி இதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது தவறான செயல்.
வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளை நாங்கள் கேட்டு பெறுவோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம். அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சில குறைகளை களைய வேண்டும். ஆட்சியில் தவறு நடக்கும் பட்சத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது.
ஆயிரம் அமித்ஷாக்கள், ஆயிரம் மோடிகள் வந்தாலும் தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க முடியாது. தமிழக மக்கள் பிரிவினைவாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் குறைவாக இருந்தாலும் அவர்களை கடந்து சென்றுவிட முடியாது என்பது வாக்காளர்களுக்கு நன்கு தெரியும். நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இவ்வாறு அவர் கூறினார்.