குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு 3 ஆயிரம் தொட்டிகள்-மேயர் வழங்கினார்

நெல்லையில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு 3 ஆயிரம் தொட்டிகளை மேயர் சரவணன் வழங்கினார்.;

Update:2023-05-26 01:17 IST

நெல்லை மாநகராட்சியில் 4 மண்டல பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் காலை நேரத்தில் நேரடியாக வாங்கப்படுகிறது. அப்போது தரம் பிரித்து வாங்கப்பட்டு, அந்த குப்பைகளில் மக்கும் குப்பைகளை நுண் உரம் செயலாக்க மையத்தில் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காத குப்பைகளை ராமையன்பட்டி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று மறுசுழற்சி செய்யப்படுகிறது.

அதன்படி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க ஏதுவாக, ரூ.74½ லட்சம் மதிப்பில் 3 ஆயிரம் குப்பை தொட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டது. அந்த குப்பை தொட்டிகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேயர் பி.எம்.சரவணன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 375 குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது.

இதில் பச்சை நிற தொட்டிகள் மக்கும் குப்பைகளை வாங்கவும், நீல நிறம் மக்காத குப்பைகளை வாங்கவும், சிவப்பு நிறம் மின்சாதன கழிவுகள், இரும்பு, மருத்துவ கழிவுகளை வாங்கவும் பயன்படுத்தப்படுகிறது. தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, துணை ஆணையாளர் தாணுமலைமூர்த்தி, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சுந்தர், வில்சன் மணிதுரை, நித்தியபாலையா மற்றும் சுகாதார பிரிவு அலுவலர்கள், ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்