கூடப்பட்டு தடுப்பணை கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்க அனுமதிக்கக்கோரி செஞ்சி வனச்சரக அலுவலகத்தை 4 கிராம மக்கள் முற்றுகை
கூடப்பட்டு தடுப்பணை கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்க அனுமதிக்கக்கோரி செஞ்சி வனச்சரக அலுவலகத்தை 4 கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.;
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி, சிங்கவரம், செஞ்சி, சிறுகடம்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நேற்று செஞ்சி வனச்சரக அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வனச்சரகர் பழனிச்சாமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை வனச்சரகர் பழனிச்சாமியிடம் அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தடுப்பணை
செஞ்சி அருகே ஆலம்பூண்டியை அடுத்த கூடப்பட்டு என்ற இடத்தில் வராக நதியின் குறுக்கே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையின் மூலம் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த ஏரிகள் நிரம்பி பாசன வசதி பெறுகிறது. இந்த தடுப்பணையில் இருந்து மேலச்சேரி கிராம எல்லையில் அமைந்துள்ள சிறுவாடி காப்புக்காட்டின் வழியாக கால்வாய் அமைக்கப்பட்டு மேலச்சேரி சன்னியாசி ஏரி, சிங்கவரம் பெரியஏரி, குப்பத்து ஏரி, சிறுகடம்பூர் பெரிய ஏரி, நாட்டேரி ஆகியவற்றுக்கு வராகநதி தண்ணீர் மூலம் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 700 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் நிலை உள்ளது.
உடைப்பு
இந்நிலையில் சிறுவாடி காப்புக்காட்டில் அமைந்துள்ள பூனைக்கண் மடை என்ற இடத்தில் வராகநதியின் கூடப்பட்டு தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் வரும் தண்ணீரும், மேலச்சேரி மலையில் இருந்து வரும் மழைவெள்ளமும் சேரும் இடத்தில் போதிய தடுப்பு இல்லாததால் மழைக்காலங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் தடுப்பணையில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் சிறுவாடி காப்புக்காட்டிலிருந்து வரும் மழைநீர் அனைத்தும் மீண்டும் விவசாய நிலங்களின் வழியே வராகநதியில் சென்று வீணாகிவிடுகிறது. எனவே இந்த கால்வாயில் ஏற்படும் உடைப்பை அவ்வப்போது பொதுமக்கள் தங்களது சொந்த செலவில் சரிசெய்து தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்தனர்.
அனுமதிக்க வேண்டும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பூனைக்கண் மடை அருகே தடுப்புச்சுவர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் ஆட்சேபனை செய்து தடுப்புச்சுவரை அமைக்க தடைசெய்து விட்டனர். வனத்துறையும், அந்த கால்வாய் கரைகளை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பருவமழைக்கு முன்னதாக தடுப்பு சுவரை அமைத்தால்தான் 5 கிராம ஏரிகள் நிரம்பும், இதன் மூலம் விவசாயம் செழிக்கும். எனவே தடுப்பு சுவர் அமைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட வனச்சரகர் பழனிச்சாமி இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.