உடல்திறன் தேர்வில் 706 பேர் தகுதி

சீருடைப்பணியாளர் பணிக்கான உடல்திறன் தேர்வில் 706 பேர் தகுதி பெற்றனர்.

Update: 2023-02-09 18:45 GMT

விழுப்புரம்:

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வுப்பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு, உடல்திறன் தேர்வு நடந்தது.

அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தகுதி பெற்ற 707 பேருக்கு உடல்திறன் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று 350 பேர் தகுதி பெற்ற நிலையில் 2-ம் நாளாக நேற்று தொடர்ந்து உடல்திறன் தேர்வு நடந்தது.

உடல்திறன் தேர்வில் 706 பேர் தகுதி

இதில் 357 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டதில் ஒருவர் மட்டும் வரவில்லை. மற்ற 356 பேரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. இதில் தகுதி நீக்கம் கிடையாது என்பதால் அனைவருக்கும் அவரவர் செய்த திறமையை பொறுத்து மதிப்பெண் வழங்கப்பட்டு அனைவருமே தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் அடிப்படையில் 2 நாட்கள் நடந்த உடல்திறன் தேர்வில் மொத்தம் 706 பேர் தகுதி பெற்றனர். இவர்கள் உடல்திறன் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் ஏற்கனவே எழுதிய எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை ஒப்பிட்டு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, கைரேகை பதிவு செய்யப்பட்டு அதில் தகுதி பெறுபவர்களுக்கு சீருடைப்பணியாளர் பணிக்கான நியமன ஆணை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்