பொங்கல் பண்டிகை: கடந்த 3 நாட்களில் அரசுப் பஸ்களில் 3.58 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையையொட்டி 38 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளன.;
சென்னை,
தமிழர் திருநாளை கொண்டாட சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். இதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவாகிவிட்டன.
ரெயில் போக்குவரத்துக்கு அடுத்தபடியாக விலை மலிவான போக்குவரத்து என்று பார்த்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள்தான். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் 38 ஆயிரத்து 175 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் (முன்பதிவு, முன்பதிவில்லாத) 3.58 லட்சம் பொதுமக்கள் பயணம் செய்துள்ளனர். பொதுமக்களின் தேவையை கருதி தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 535 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.