அன்னூர் அருகே 2 வயது குழந்தை மர்மச்சாவு

அன்னூர் அருகே 2 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-06-09 04:15 IST

அன்னூர்

அன்னூர் அருகே 2 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏ.சி. மெக்கானிக்

கோவை அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32), ஏ.சி. மெக்கானிக். இவருக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீகையா (4) என்ற பெண் குழந்தையும், ஸ்ரீ ஜேஸ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பபிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

இதையடுத்து ராஜேஷ், அந்த பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கீர்த்தனா (23) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர் ஸ்ரீகையா, ஸ்ரீஜேஸ் ஆகிய 2 குழந்தைகளையும் சித்தியான கீர்த்தனா கவனித்து வந்தார்.

2 வயது குழந்தை சாவு

இந்த நிலையில் 2 வயது குழந்தையான ஸ்ரீஜேஸ்சுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு கீர்த்தனா மருந்து கொடுத்துள்ளார். பின்னர் ஸ்ரீஜேஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து இடது கை முட்டிலும், வாயிலும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்தது.

இதையடுத்து கீர்த்தனா ஸ்ரீஜேசை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜேஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சித்தியிடம் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக போலீசார் குழந்தையின் உடலை சோதனை செய்தபோது, இடது கை மணிக்கட்டில் ஏதோ கடித்தது போல காயம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தையின் சித்தியான கீர்த்தனாவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும் தண்ணீர் தொட்டியின் மூடி விழுந்து காயமடைந்ததாக கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் குழந்தையின் இறப்பை மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து, கீர்த்தனாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை எப்படி இறந்தது என்பது? பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்