பொருநை அருங்காட்சியகத்தை 2 நாட்களில் 3 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.;
நெல்லை,
நெல்லை ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, மக்கள் குடும்பத்துடன் அருங்காட்சியகத்திற்கு வருகை தரத்தொடங்கினர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் வந்து தொல்பொருட்களைப் பார்வையிட்டனர். பொதுமக்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து எளிதாக வந்துசெல்லும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதிக்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற அடிப்படையில், இயக்கப்பட்டன. புதிய பஸ் நிலையம் மற்றும் சந்திப்பு பஸ் நிலையங்களிலிருந்து இந்த சேவைகள் வழங்கப்படுவதால், பொதுமக்கள் சிரமமின்றி அருங்காட்சியகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அருங்காட்சியகத்தை 2 நாட்களில் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர்.
பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10, மாணவர்களுக்கு ரூ. 5 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையிட காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காலை 10 மணி முதல் இரவு 6 மணி வரை நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்துக்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.