பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.

Update: 2024-05-17 12:12 GMT

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி, மாயமான சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 பேர் சிக்கிய நிலையில், 4 பேரை அங்கிருந்தோர் நல்வாய்ப்பாக மீட்டனர்.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவன் அஸ்வின் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வினின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்