காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் சாவு
விக்கிரவாண்டி அருகே காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் புதுப்பெண் இறந்தார். அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் கோபிநாத்(வயது 25). பி.எஸ்சி. பி.எட். படித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த பி.எஸ்சி. பட்டதாரியான கலைசெல்வி(20) என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததும் இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையும் மீறி 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து கலைச்செல்வியின் தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஜூலை மாதம் 2-ந் தேதி இரு குடும்பத்தினரையும் அழைத்து பெரியதச்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கலைச்செல்வி, தனது கணவர் கோபிநாத்துடன் செல்வதாக கூறினார். இதையடுத்து அவரது விருப்பத்தின் பேரிலேயே கணவருடன் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
கிணற்றில் பிணம்
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த கலைச்செல்வி தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனிடையே இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது விவசாய கிணற்றில் கலைச்செல்வி பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பெரியதச்சூர் போலீசார் விரைந்து சென்று கலைச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இது பற்றி அறிந்ததும் கலைச்செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், கலைச்செல்வியை அடித்து கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர் . மேலும் கலைச்செல்வியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்கனவே அய்யனார், கோபிநாத் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்ததும் மற்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.