இரவு நேரமும் டாக்டரை பணியமர்த்த வேண்டும்

திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரமும் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-08-27 00:15 IST

திருக்கடையூர்:

திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரமும் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் திருக்கடையூர், டீ. மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், வளையல்சோழகன், நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், ராவணன்கோட்டகம், கண்ணங்குடி ,கிள்ளியூர், சரபோஜிராஜபுரம், சீவகசிந்தாமணி, அபிஷேக கட்டளை, பிச்சைகட்டளை, காலகட்டளை, தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இங்கு பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்றாலும் விபத்து ஏற்பட்டாலும் முதலுதவிக்காக மேற்கண்ட சுகாதார நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த நிலையில் இந்த சுகாதார நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே டாக்டர்கள், செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாலை 4 மணிக்கு மேல் இரவு வரை டாக்டர்கள் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள நோயாளிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இதனால் இங்குள்ள நோயாளிகள் மயிலாடுதுறை அல்லது திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தான் சிகிச்சை பெறுகிறார்கள். இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரமும் டாக்டர்களை பணியமர்த்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்