அம்மா உணவக சமையலறையில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீர்
அம்மா உணவக சமையலறையில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில் அம்மா உணவகம் காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமிகுளம் பகுதியிலும், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பழைய ரெயில் நிலைய சாலையிலும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது காஞ்சீபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுபாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில் காலை, பிற்பகல் வேளைகளில் ஆஸ்பத்திரிக்கு வரக்கூடிய நோயாளிகள், ஏழை, எளிய மக்கள் என ஏராளமானோர் உணவருந்தி பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள கழிவறையில் புதை வடிகால் இணைப்பில் அடைப்பு ஏற்பட்டு அம்மா உணவக சமையலறையில் தேங்கி நிற்பதோடு அந்த பகுதியில் சமைக்கப்படும் உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.