மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் சேமிப்பு கணக்கை தொடங்கி பயன்பெறலாம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கட்டணமில்லா சேமிப்பு கணக்கை தொடங்கி பயன் பெறலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.;
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கட்டணமில்லா சேமிப்பு கணக்கை தொடங்கி பயன் பெறலாம் என்று அதிகாரி தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
அதேபோல் 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 991 நியாயவிலைக் கடைகளில் உள்ள 2 லட்சத்து 99 ஆயிரத்து 413 ரேஷன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு நடக்கிறது.
2-ம் கட்ட முகாமில் மாவட்டத்தில் உள்ள 636 நியாயவிலைக் கடைகளில் உள்ள 4 லட்சத்து 91 ஆயிரத்து 484 ரேஷன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு நடக்கிறது.
விண்ணப்பம் வினியோகம்
முதற்கட்ட முகாமிற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நியாய விலைக்கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.
இந்த டோக்கனில் முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட நாளில் முகாமில் கலந்து கொள்ளும் படி நியாய விலைக்கடை பணியாளர்கள் தெரிவித்தனர்.
சேமிப்பு கணக்கு
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்டத்திற்கு வங்கி கணக்கு எண் அவசியம்.
வங்கி கணக்கு இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் புதிதாக கட்டணமில்லா சேமிப்பு கணக்கைதொடங்கி பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.