ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
தமிழக அரசு மருத்துவ துறையில் 17 ஆயிரம் பேர் நிரந்தர செவிலியர்களாகவும், 13,000 பேர் ஒப்பந்த செவிலியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
நோயாளிகளிடம் அக்கறையுடனும், கருணையுடனும் நடந்து கொள்ளும் செவிலியர்கள் மனப்பூர்வமாக பணியாற்ற வேண்டுமானால் அவர்களுக்கான மனநிறைவான ஊதியம் நியாயமானதாக வழங்கப்பட வேண்டும். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்பவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவது அநீதி ஆகும். எனவேதான் பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 மாத காலமாக பல்வேறு போராட்டங்களை ஒப்பந்த செவிலியர்கள் நடத்தி வந்தனர்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2015-ல் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்களுக்கு உரிய பலன்கள் வேண்டி வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய பலன்களையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தில் செவிலியர்களுக்கான பலன்களை வழங்க நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறிய தமிழக அரசு தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க முடியாது என கூறினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தலை தொடர்ந்து 4 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை 3,800 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் 8,300 க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.
இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை கைவிட வேண்டும், பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18-ஆம் தேதி சென்னையில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட 750 செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போதும் தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கொரோனா காலகட்டங்களில் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து மருத்துவ சேவையாற்றிய இந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மக்கள் தொகை அதிகரிப்பும், நோய்களின் தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். இந்த காலகட்டத்தில் செவிலியர்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது.
எனவே காலிப் பணியிடங்கள் மட்டுமல்லாது தேவைப்படும் மருத்துவமனைகளில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கான அனைத்து பலன்களையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.