மரத்தில் கார் மோதி பெண் பலி; 4 பேர் படுகாயம்
காரைக்குடி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;
காரைக்குடி,
காரைக்குடி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உறவினர் இல்ல நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ரவி (வயது 62). இவருடைய மனைவி அழகு மீனாள் (60), மகன் மீனாட்சி சுந்தரம் (28), இவரது மனைவி ஜனனி (25), ரவியின் மூத்த மகன் வழி பேரன் அபினவ் (6). இவர்கள் 5 பேரும் அறந்தாங்கியில் இருந்து காரில் வந்து காரைக்குடி பாரி நகரில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் பிள்ளையார்பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு காரில் திரும்பினர். காரை ரவி ஓட்டினார். அருகில் அவரது மனைவி அழகு மீனாள் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் மகன், மருமகள், பேரன் ஆகியோர் இருந்தனர்.
பெண் பலி
காரைக்குடி அடுத்த பாதரக்குடி அருகே செல்லும் போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்துத 5 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அழகுமீனாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.