லாரி டிரைவர்கள் மீது தாக்குதல்: மத்தியபிரதேச மாநில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மேளனம் மனு

Update:2023-03-25 00:15 IST

நாமக்கல்:

லாரி டிரைவர்களை தாக்கிய மத்தியபிரதேச ஆதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கூறி தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டது.

தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம்

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த லாரி உரிமையாளர்களின் 3 வாகனங்கள் கேரளாவில் இருந்து டெல்லிக்கு பலாப்பழம் லோடு ஏற்றி சென்றது. இந்த வாகனங்கள் கடந்த 20-ந் தேதி காலை மத்திய பிரதேச மாநிலம் பன்மோர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்றபோது, வட்டார போக்குவரத்து அலுவலர் அவற்றை நிறுத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து டிரைவர்கள் தலா ரூ.500 வீதம் கொடுத்து உள்ளனர். இந்த பணம் போதாது என்று கூறி தலா ரூ.2 ஆயிரம் பெற்று உள்ளார். மேலும் லஞ்சத்தை பெற்றுக்கொண்ட அதிகாரி 3 வாகனங்களின் ஆவணங்களையும் பிடுங்கி கொண்டு ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

டிரைவர்கள் மீது தாக்குதல்

லஞ்சம் கொடுத்தும் வாகனங்களின் ஆவணங்களை தர மறுத்த வட்டார போக்குவரத்து அலுவலரின் செயலை கண்டிக்கும் விதமாக வாகனங்களை நெடுஞ்சாலையில் நிறுத்தி உள்ளனர். இதனை கவனித்த வட மாநில டிரைவர்களும், வாகனங்களை நெடுஞ்சாலையில் நிறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலரின் செயலை தட்டிக்கேட்டு உள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பன்மோர் போலீசார் டிரைவர்களை கண்மூடித்தனமாக அடித்து, உதைத்துள்ளனர். மேலும் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று விட்டனர்.

பணி இடைநீக்கம்

எங்களது டிரைவர்களை அடித்து துன்புறுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால், டிரைவர்களின் உயிருக்கும், வாகனங்களுக்கும் வடமாநிலங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளுடன் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்