நெல் அறுவடைக்கு பின் 225 ஏக்கர் பரப்பளவில் பயிறுவகை சாகுபடி

நெல் அறுவடைக்கு பின் 225 ஏக்கர் பரப்பளவில் பயிறுவகை சாகுபடி

Update: 2023-02-02 13:23 GMT

முத்தூர்,

முத்தூர் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின் மொத்தம் 225 ஏக்கர் பரப்பளவில் பயிறு வகைகள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கீழ்பவானி பாசனம்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், மங்களப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன் வலசு, வள்ளியரச்சல் வருவாய் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்தவுடன் வேளாண் வயல்களில் உடனடியாக நெல் தரிசில் பயிறு வகைகள் சாகுபடி செய்து கூடுதல் பலனடைய வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதிகளில் பெய்த தொடர் சாரல், மிதமான, பலத்த மழையால் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கிணறுகள், ஓடைகள் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென நன்கு உயர்ந்து உள்ளது.

பயிறு வகைகள் சாகுபடி

இதனால் நஞ்சை சம்பா நெல் அறுவடைக்கு பின் நெல் தரிசில் பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் நெல் தரிசில் குறைந்த வயதுடைய பயிறு வகைகள், மஞ்சள் தேமல் நோய் தாக்காமல், 70 நாட்களில் பலன் தரக்கூடிய வம்பன் 8,10 ஆகிய புதிய ரக பயிறு வகைகள் மற்றும் குறைந்த அளவே பாசன நீர் தேவைப்படும் பயிறு வகைகள் விவசாயிகள் சாகுபடி செய்வது மிகவும் ஏற்றதாகும். மேலும் பயிறு வகைகள் சாகுபடி செய்வது நெல் தரிசு நிலத்தின் மண் வளத்தை நன்கு வளப்படுத்த கூடியவையாகும்.

இதன்படி முத்தூர் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின் நெல் தரிசில் மொத்தம் 225 ஏக்கர் பரப்பளவில் பயிறு வகைகள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விதை கிராம திட்டத்தின் கீழ் பயிறு வகை சாகுபடி செய்வதற்கு விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவற்றிக்கு வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் மானிய உதவி திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

எனவே இப்பகுதி நஞ்சை சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் விரைவில் நடத்தப்பட உள்ள நெல் தரிசு பயிறு வகை சாகுபடி முகாமில் கலந்து கொண்டு பயிர் வகை சாகுபடி வேளாண் தொழில்நுட்பங்கள், மானிய திட்டங்கள் ஆகியவற்றை அறிந்து தங்கள் விளை நிலங்களில் குறைந்த காலத்தில், குறைந்த நீர் நிர்வாகத்தில் நல்ல கூடுதல் லாபம், பலன் தரக்கூடிய பயிறு வகைகள் சாகுபடி செய்து பயன் அடைய முன் வர வேண்டும்.

இத்தகவலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்